இந்தியாவில் வசிக்கும் அனஸ்தாசியா ஷரோவா என்ற ரஷ்ய பெண்மணி, தான் இந்தியாவில் வாழ்ந்த பிறகு மட்டுமே புரிந்து கொள்ள முடிந்த 9 சுவாரசியமான அன்றாடப் பழக்கவழக்கங்களை வீடியோவாகப் பகிர்ந்துள்ளார்.

இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி பலரது கவனத்தையும் ஈர்த்து, பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து வெளிநாட்டினருக்குத் தொடக்கத்தில் விசித்திரமாகத் தோன்றினாலும், இந்தியாவில் வாழத் தொடங்கும்போது அது எப்படி மிக இயல்பான ஒன்றாக மாறுகிறது என்பதை அவர் தனது பதிவில் விளக்கியுள்ளார்.

“>

இது குறிப்பாக, பிரஷர் குக்கரில் உருளைக்கிழங்கு வேகவைக்க எத்தனை விசில் தேவை, சுண்டல் வேகவைக்க எத்தனை விசில் தேவை என்பதைத் துல்லியமாகத் தெரிந்து வைத்திருப்பது முதல், கூகுள் மேப்ஸை விட உள்ளூர் மக்களிடம் வழி கேட்பதே மிகவும் நம்பகமானது என்பதைப் புரிந்து கொள்வது வரை பல சுவாரசியமான உள்ளூர் விஷயங்களை அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அதோடு அவர் பட்டியலிட்டுள்ள அந்த 9 விஷயங்களில், சாலையில் வாகனம் ஓட்டும்போது ஒரே நேரத்தில் நான்கு திசைகளிலும் கவனமாகப் பார்ப்பது, துணிகளின் நிறம் மங்கிவிடாமல் இருக்க அவற்றை நேரடி வெயிலில் காயப்போடாமல் நிழலில் உலர்த்துவது, பூச்சிகளை விரட்ட கிராமப்புற வீடுகளில் சாம்பிராணி அல்லது தூபங்களைப் பயன்படுத்துவது போன்ற எதார்த்தமான அனுபவங்கள் இடம் பெற்றுள்ளன.

மேலும், அண்டை வீட்டாருடன் பண்டிகை காலங்களில் இனிப்புகளைப் பகிர்ந்து கொள்வது, வீட்டிற்குள் வரும் விருந்தினர்களுக்கு முதலில் குடிநீர் வழங்குவது, உரையாடல்களில் வெவ்வேறு மொழிகளைக் கலந்து பேசுவது, மற்றும் “ப்ரோ” என்ற வார்த்தையை அடிக்கடி பயன்படுத்துவது போன்ற இந்தியர்களின் தனித்துவமான விருந்தோம்பல் மற்றும் சமூகப் பண்புகளையும் அவர் வெகுவாகப் பாராட்டியுள்ளார்.

இந்த வீடியோவிற்குப் பல இந்திய நெட்டிசன்கள் தங்களின் ஆதரவைத் தெரிவித்து, “இந்தியாவின் உண்மையான அன்றாட வாழ்வியலை மிக அழகாகவும் துல்லியமாகவும் பிரதிபலித்துள்ளீர்கள்” என்று மகிழ்ச்சியுடன் பாராட்டி வருகின்றனர்.