பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் பள்ளி முடிந்து குழந்தைகளை அழைத்துக்கொண்டு வீடு திரும்பிய தந்தை ஒருவர், மாநகராட்சி நிர்வாகத்தின் கடும் அலட்சியத்தால் நேரிட்ட விபத்தில் சிக்கி மயிரிழையில் உயிர் தப்பியுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சாலையில் தோண்டப்பட்டு எவ்வித பாதுகாப்பு எச்சரிக்கையும் இன்றி திறந்தே கிடந்த அந்தப் பெரிய சாக்கடைக் குழியில், பைக்கில் சென்ற தந்தை தனது இரண்டு குழந்தைகளுடன் நிலைதடுமாறி உள்ளே விழுந்த காட்சிகள் காண்போரை நடுங்க வைக்கின்றன.
பைக் மற்றும் குழந்தைகளுடன் அந்தச் சேற்று நீரில் விழுந்த தந்தை, அங்கிருந்த பொதுமக்களின் துரித நடவடிக்கையால் எவ்வித உயிரிழப்பும் இன்றி பத்திரமாக மீட்கப்பட்டனர். தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் இந்த காணொளி, மாநகராட்சி நிர்வாகத்தின் அலட்சியத்தின் உச்சத்தை வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது. சாலைகளைத் தோண்டிவிட்டு முறையாக மூடாமல் பல நாட்களாக அப்படியே போட்டு வைப்பது வாகன ஓட்டிகளுக்கு, குறிப்பாகப் பள்ளிச் சிறுவர்களுக்கு எத்தகைய ஆபத்தை விளைவிக்கும் என்பதற்கு இந்தச் சம்பவமே சாட்சி.
📍Ludhiana, Punjab: A father returning from school with his child on a bike fell into an open sewage pit, highlighting serious civic negligence, with questions being raised over the Municipal Corporation’s responsibility for leaving it uncovered. pic.twitter.com/wAILI6xjf7
— Deadly Kalesh (@Deadlykalesh) March 29, 2026
சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாகக் களத்தில் இறங்கி, நகர் முழுவதும் உள்ள திறந்த நிலையில் இருக்கும் மேன்ஹோல்களை மூடுவதற்கும், விபத்து ஏற்படுவதற்கு முன்பே பாதுகாப்பு நடவடிக்கைகளை உறுதி செய்யவும் பொதுமக்கள் சமூக வலைதளங்களில் கடும் கண்டனங்களைப் பதிவிட்டு வருகின்றனர்.
