பெங்களூருவில் மென்பொருள் பொறியாளர்களாகப் பணியாற்றி வந்த இளம் தம்பதி அடுத்தடுத்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தெலங்கானாவைச் சேர்ந்த பானு சந்தர் ரெட்டி (32) மற்றும் அவரது மனைவி பீபி ஷாஜியா சிராஜ் (31) ஆகியோர் பெங்களூருவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தனர்.
திங்களன்று பானு சந்தர் ரெட்டி தனது அறையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட நிலையில், கதவு திறக்கப்படாததால் சந்தேகமடைந்த ஷாஜியா அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்துப் பார்த்துள்ளார்.
அங்கு தனது கணவர் பிணமாகத் தொங்குவதைக் கண்டு நிலைகுலைந்து போனார். கணவரின் பிரிவைத் தாங்க முடியாமல் கதறி அழுத ஷாஜியா, அடுத்த சில நிமிடங்களிலேயே அதே குடியிருப்பின் 17-வது மாடியில் இருந்து கீழே குதித்துத் தனது உயிரை மாய்த்துக்கொண்டார்.
கண் இமைக்கும் நேரத்தில் நடந்த இந்த இரட்டைத் தற்கொலை சம்பவம் பெங்களூரு ஐடி வட்டாரத்தையே அதிர வைத்துள்ளது. இவர்களது தற்கொலைக்குக் குடும்பப் பிரச்சனை காரணமா அல்லது பணிச்சுமையால் ஏற்பட்ட மன அழுத்தமா என்பது குறித்துப் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
