பிரபல நகைச்சுவை நடிகர் சுனில் பால், பொது நிகழ்ச்சி ஒன்றில் மேடையிலேயே அவமதிக்கப்பட்டு வெளியேற்றப்பட்ட சம்பவம் சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
மும்பை ஜூஹு பகுதியில் உள்ள இஸ்கான் (ISKCON) வளாகத்தில் கடந்த ஜனவரி 17, 2026 அன்று கவிஞர்கள் பங்கேற்ற ‘காவிய சம்மேளனம்’நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த விழாவிற்குச் சிறப்பு விருந்தினராக நகைச்சுவை நடிகர் சுனில் பால் அழைக்கப்பட்டிருந்தார்.
நிகழ்ச்சியின் போது, மேடைக்கு அழைக்கப்பட்ட சுனில் பாலுக்கு பூங்கொத்து கொடுத்து மரியாதை செய்யப்பட்டது. அதன்பின்னர், அங்கிருந்த ரசிகர்களிடம் சில வார்த்தைகள் பேசுவதற்காக அவர் மைக் அருகே சென்றார்.
அப்போது அவர் பேசுவதைத் தடுத்த அங்கிருந்த நபர் ஒருவர், சுனில் பாலின் கையைப் பிடித்து மைக்கிலிருந்து வலுக்கட்டாயமாக விலக்கினார். “தயவுசெய்து நீங்கள் மேடையை விட்டு இறங்குங்கள். இதற்கு மேல் பேச ஒன்றுமில்லை. உங்களுக்குச் செய்யப்பட்ட மரியாதை போதும், போய் அமருங்கள்” என்று ஒருமையில் பேசுவது போன்ற தோனியில் கடிந்துகொண்டார்.
இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த சுனில் பால், “என்னை நன்றி மட்டும் கூற விடுங்கள்” என்று கேட்டும், அந்த நபர் பிடிவாதமாக அவரைப் பேச விடாமல் தடுத்தார்.
View this post on Instagram
இந்த இக்கட்டான சூழலிலும் சுனில் பால் மிகுந்த நிதானத்தைக் கடைப்பிடித்தார். அந்த நபருடன் வாக்குவாதம் செய்யாமல், அமைதியாகத் தனது உடல் மொழியிலேயே ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துவிட்டு மேடையிலிருந்து கீழே இறங்கினார். இவ்வளவு பெரிய கலைஞர் ஒருவருக்கு இழைக்கப்பட்ட இந்த அவமரியாதை சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. சுனில் பாலின் பொறுமைக்கு இணையவாசிகள் பாராட்டு தெரிவித்து வரும் அதேவேளையில், அந்த நபரின் செயலுக்குக் கண்டனங்களும் எழுந்துள்ளன.
மேலும் பிரபலமான ‘கபில் சர்மா’ ஷோ மூலம் நாடு முழுவதும் அறியப்பட்டவர் சுனில் பால். சில ஆண்டுகளுக்கு முன்பு கபில் சர்மாவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அந்த நிகழ்ச்சியிலிருந்து வெளியேறினார் என்பது குறிப்பிடத்தக்கது
