வங்கதேசத்துக்கு எதிரான ஒருநாள் தொடரை பாகிஸ்தான் அணி இழந்ததைத் தொடர்ந்து, அந்த நாட்டு அணியின் முன்னாள் விக்கெட் கீப்பர் கம்ரான் அக்மல் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளார். “ஐசிசி கோப்பைகளைத் திருடிக்கொண்டுதான் வரப்போகிறீர்களா?” என பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தை அவர் கடுமையாகச் சாடியுள்ளார்.

பாகிஸ்தான் மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் தீர்மானிக்கும் கடைசி ஆட்டம் டாக்காவில் நடைபெற்றது. இதில் 11 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற வங்கதேசம், தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றி சாதனை படைத்தது. ஷாஹீன் ஷா அப்ரிடி தலைமையிலான பாகிஸ்தான் அணியில் பாபர் அசாம், ஃபகார் ஜமான் போன்ற நட்சத்திர வீரர்கள் காயத்தால் இடம்பெறாதது அந்த அணிக்குப் பின்னடைவாக அமைந்தது.

இந்தநிலையில் தோல்வி குறித்து தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பேசிய கம்ரான் அக்மல் கூறியதாவது, கடவுளுக்காக பாகிஸ்தான் கிரிக்கெட்டைப் பற்றிச் சிந்தித்துப் பாருங்கள். நமது தரம் எவ்வளவு தூரம் கீழே இறங்கிவிட்டது என்பதைப் பாருங்கள். பாகிஸ்தானுடன் ஒருநாள் தொடரில் விளையாடினால் நெதர்லாந்து அணி கூட நம்மைத் தோற்கடித்து டெஸ்ட் அந்தஸ்தைப் பெற்றுவிடலாம் என்று நினைக்கும். நீங்கள் கிரிக்கெட்டை ஒரு கேலிக்கூத்தாக மாற்றிவிட்டீர்கள்.”

மேலும் அவர் கூறுகையில், “இருதரப்பு தொடர்களிலேயே வெற்றி பெற முடியாவிட்டால், ஐசிசி கோப்பைகளை எப்படி வெல்லப் போகிறீர்கள்? என்ன, கோப்பைகளைத் திருடிக்கொண்டு வரப்போகிறீர்களா? இதுபோன்ற சோதனையான முடிவுகளை எடுக்க இது என்ன சாதாரணப் போட்டியா?” என அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பினார்.

பாகிஸ்தான் அணி சமீபத்தில் நடைபெற்ற டி20 உலகக் கோப்பையிலும் அரையிறுதிக்கு முன்னேற முடியாமல் வெளியேறியது. இந்தியாவிடம் லீக் சுற்றிலும், இங்கிலாந்திடம் சூப்பர்-8 சுற்றிலும் தோல்வியடைந்தது. கடந்த நான்கு ஐசிசி தொடர்களாகப் பாகிஸ்தான் அணி அரையிறுதிக்குக் கூடத் தகுதி பெறாமல் சொதப்பி வருவது அந்த நாட்டு ரசிகர்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.