சென்னை ஐஐடியில் புதிதாக தொடங்கப்பட்டுள்ள இளங்கலை தரவு அறிவியல் பட்டப்படிப்புக்கு தகுதி உடைய எஸ்சி மற்றும் எஸ்டி மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் 12ஆம் வகுப்பு அல்லது அதற்கு இணையான டிப்ளமோ படிப்பு முடித்த எஸ்சி எஸ்டி மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். இந்த திட்டத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்கள் சேர்ந்து படிப்பதற்கு ஐஐடி மூலமாக நடத்தப்படும் நுழைவுத் தேர்வில் பங்கேற்க வேண்டிய அவசியமில்லை. ஐஐடி மற்றும் தாட்கோ மூலமாக வழங்கப்படும் நான்கு வார பயிற்சியின் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே போதும்.

இதில் அனைத்து வகுப்புகளும் இணையதளம் மூலமாக நடத்தப்படும். மாணவர்கள் ஒரே நேரத்தில் விருப்பப்பட்ட படிப்பை படித்துக் கொண்டே இந்த பட்டப்படிப்பை எளிதில் படிக்கலாம். இணையதளம் மூலமாக ஜனவரி 8-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு தேர்வு கட்டணம் ஆயிரத்து 500 ரூபாய் செலுத்த வேண்டும். கூடுதல் விவரங்களுக்கு 044-25246344 என்ற தொலைபேசி எண் அல்லது 9445029456 என்ற கைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.