வாக்குப்பதிவுக்கும் பிந்தைய கருத்துக்கணிப்புகளை (Exit Polls) வெளியிடுவதற்குத் தேர்தல் ஆணையம் (EC) அதிரடியான கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. தேர்தல் நடைபெறவிருக்கும் புதுச்சேரி, கேரளா, அசாம் ஆகிய மாநிலங்களில் ஏப்ரல் 9-ம் தேதியும், தமிழ்நாட்டில் ஏப்ரல் 23-ம் தேதியும், மேற்கு வங்கத்தில் ஏப்ரல் 29-ம் தேதியும் வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. இந்நிலையில், தேர்தல் செயல்பாடுகள் முழுமையாக முடியும் வரை கருத்துக்கணிப்புகளை வெளியிடத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, ஏப்ரல் 9-ம் தேதி காலை 7 மணி முதல் ஏப்ரல் 29-ம் தேதி மாலை 6.30 மணி வரை எந்தவொரு ஊடகத்திலோ அல்லது சமூக வலைதளங்களிலோ தேர்தல் கருத்துக்கணிப்புகளை வெளியிடக் கூடாது என தேர்தல் ஆணையம் திட்டவட்டமாக உத்தரவிட்டுள்ளது. ஜனநாயக முறையிலான தேர்தல் நடைமுறைகளைப் பாதுகாக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவை மீறிச் செயல்படுபவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
