ஆன்லைன் மருந்து விற்பனைக்குத் தடை விதிக்கக் கோரி, வரும் மே 20-ம் தேதி நாடு முழுவதும் சுமார் 12.4 லட்சம் மருந்தகங்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளன. முறைப்படுத்தப்படாத ஆன்லைன் விற்பனையால் நோயாளிகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாவதாக அகில இந்திய மருந்தக உரிமையாளர்கள் சங்கம் குற்றம் சாட்டியுள்ளது.

குறிப்பாக, ஏஐ மூலம் உருவாக்கப்பட்ட போலி மருந்துச் சீட்டுகளைப் பயன்படுத்தி மருந்துகள் விற்கப்படுவதால், உயிருக்கே ஆபத்தான ‘மருந்து எதிர்ப்புத்திறன்’ அதிகரிக்கும் அபாயம் உள்ளதாக அவர்கள் எச்சரித்துள்ளனர். முறையான சரிபார்ப்பு இன்றி ஆன்டிபயாடிக் மற்றும் போதை தரக்கூடிய மருந்துகள் தடையின்றி கிடைப்பது சமூக சீர்கேட்டிற்கு வழிவகுக்கும் என்றும், இந்தத் தொழிலை நம்பியுள்ள 5 கோடி மக்களின் வாழ்வாதாரம் இதனால் பாதிக்கப்படுவதாகவும் சங்கம் கவலை தெரிவித்துள்ளது.

மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் போராட்டத்தைத் தீவிரப்படுத்தப் போவதாக அறிவித்துள்ள மருந்தக உரிமையாளர்கள், வேலைநிறுத்த நாளன்று அவசர கால மருந்துகள் தடையின்றி கிடைக்க ஏற்பாடு செய்துள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.