மும்பை நகரின் மலாட் ஈஸ்ட் பகுதியில் உள்ள ஜே.பி டெக்ஸ் குடியிருப்பில் நடத்தப்பட்ட டியூஷன் வகுப்பில் ஒரு பேராசிரியையின் கொடூர செயல் மக்கள் மத்தியில் பெரும் அதிர்வை ஏற்படுத்தியுள்ளது.

ரஜ்ஷ்ரீ ரதோர் என்ற தனியார் டியூஷன் ஆசிரியை, எழுத்து மோசமாக இருப்பதை காரணமாக காட்டி, 8 வயதுடைய மாணவன் மொஹம்மத் ஹம்சா கானின் வலது கையை மெழுகுவர்த்தியின் தீயில் வைத்திருப்பதாக கூறப்படுகிறது.

லக்ஷதாம் பள்ளியில் 3ஆம் வகுப்பு படிக்கும் ஹம்சா, தினமும் மாலை 7 மணி முதல் 9 மணி வரை ரஜ்ஷ்ரீ ரதோரின் வீட்டில் டியூஷன் வகுப்புகள் செல்லவிருந்தார். சம்பவம் நிகழ்ந்த அன்று, ஹம்சாவின் சகோதரி ரூபினா வழக்கம்போல் அவரை டியூஷனுக்கு அழைத்து வந்தார்.

இரவு 9 மணிக்கு, ஹம்சா, அழுதுக்கொண்டிருப்பதாக ஆசிரியை ரதோர் அவரது தந்தை முஸ்தகீன் கானை அழைத்து கூறினார். குழந்தையை வீட்டுக்கு அழைத்து வந்த பின்னர், உண்மையை கூறிய ஹம்சா, ஆசிரியை தனது கையை மெழுகுவர்த்தி தீக்குள் வைத்ததாக தெரிவித்தார். உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு, பின்னர் பாபாசாகேப் அம்பேத்கர் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.

இந்தக் குற்றச்சாட்டு அடிப்படையில் முஸ்தகீன் கான் அளித்த புகாரின் பேரில், மலாட் போலீசார் ரஜ்ஷ்ரீ ரதோருக்கு எதிராக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பள்ளி மற்றும் டியூஷன் வகுப்புகளில் குழந்தைகளின் பாதுகாப்பு குறித்து பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ள இந்த சம்பவம், சமூக வலைதளங்களில் கடும் எதிர்ப்பை ஏற்படுத்தியுள்ளது.