ஈரோடு கிழக்கு தொகுதியில் வருகின்ற 27-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில் மார்ச் மாதம் 2-ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கிறது. இந்த தேர்தலில் திமுக மற்றும் அதிமுக உள்ளிட்ட கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வரும் நிலையில் அதிமுக வேட்பாளர் கேஎஸ் தென்னரசுவுக்கு ஆதரவாக எடப்பாடி பழனிச்சாமி ஈரோடு கிழக்கில் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டுள்ளார்.‌ அதன்படி ராஜகோபால் தோட்டம்  பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட எடப்பாடி பழனிச்சாமி பேசியதாவது, திமுக ஆட்சியில் மக்களுக்காக எந்த ஒரு திட்டமும் நிறைவேற்றப்படவில்லை.

அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட திட்டங்களை தான் தொடங்கி வைக்கிறார்கள். தமிழக மக்களின் வரிப்பணத்தை பயன்படுத்தி எழுதாத பேனாவுக்கு கடற்கரையில் 81 கோடி மதிப்பீட்டில் நினைவு சின்னத்தை வைக்கப் போகிறார்கள். இதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். பேனா நினைவுச் சின்னத்தை கடலில் வைக்காமல் கருணாநிதியின் நினைவிடத்திலோ அல்லது அறிவாலயத்திலோ வைக்க வேண்டியதுதானே. மேலும் 2 கோடியில் மட்டும் பேனா நினைவுச் சின்னத்தை வைத்துவிட்டு மீதமுள்ள 79 கோடியில் ஏழை மாணவர்களுக்கு எழுதும் பேனாவை கொடுக்கலாமே என்று கூறினார்.