ஈரோடு கிழக்கு தொகுதியில் வருகின்ற 27-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில் மார்ச் மாதம் 2-ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கிறது. இந்த தேர்தலில் திமுக மற்றும் அதிமுக உள்ளிட்ட கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வரும் நிலையில் அதிமுக வேட்பாளர் கேஎஸ் தென்னரசுவுக்கு ஆதரவாக எடப்பாடி பழனிச்சாமி ஈரோடு கிழக்கில் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டுள்ளார்.‌ அதன்படி ராஜகோபால் தோட்டம்  பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட எடப்பாடி பழனிச்சாமி பேசியதாவது, திமுக ஆட்சிப் பொறுப்பை ஏற்று 21 மாதங்கள் ஆகியும் மக்களுக்காக எந்த பணியும் செய்யவில்லை.

எனவே வாக்கு சேகரிக்க வரும் அமைச்சர்களை தடுத்து நிறுத்தி வாக்காளர்கள் அவர்களிடம் கேள்வி கேட்க வேண்டும். பொய் சொல்லி ஆட்சிக்கு வந்தவர்களுக்கு இடைத்தேர்தலில் சரியான பாடம் புகட்ட வேண்டும். அதன் பிறகு அதிமுக ஆட்சிக்காலத்தில் இடைத்தேர்தல் நடைபெற்ற போது யார் வேண்டுமானாலும் வாக்காளர்களை சந்தித்து வாக்கு கேட்கலாம். ஆனால் தற்போது வாக்காளர்களை கொட்டகைக்குள் அடைத்து வைக்கிறார்கள். இது தொடர்பாக தேர்தல் ஆணையத்தில் புகார் கொடுத்தும் அவர்கள் நடவடிக்கை எடுக்கவில்லை. ஸ்டாலின் உத்தரவின் பேரில் ஆடு, மாடுகளை அடைத்து வைப்பது போன்று வாக்காளர்களை அடைத்து வைக்கிறார்கள்.

இந்நிலையில் வாக்காளர்களை அடைத்து வைத்திருக்கும் இடத்திற்கு நானே நேரில் சென்று வாக்கு சேகரிப்பேன் என்று கூறியதன் காரணமாக தேர்தல் அதிகாரிகளும் போலீசாரும் வாக்காளர்களை பிரித்து அனுப்பி வைத்துள்ளனர். வாக்காளர்களை எங்கு அடைத்து வைத்தாலும் நான் என்னுடைய ஆதரவாளர்களுடன் சென்று கண்டிப்பாக வாக்கு சேகரிப்பேன். வாக்காளர்களை அடைத்து வைத்தால் மட்டும் அதிமுகவின் வெற்றியை தடுக்க முடியுமா?. மேலும் இது தொடர்பாக தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினார்.