இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்றாவது ஒருநாள் போட்டியின் போது, எல்லைக்கோட்டுக்கு அருகே பீல்டிங் செய்து கொண்டிருந்த இந்திய வேகப்பந்து வீச்சாளர் அர்ஷ்தீப் சிங், தன்னை விமர்சித்த ரசிகர் ஒருவருக்கு ஆவேசமாக பதிலளித்த வீடியோ சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்தூரில் நடைபெற்ற இந்தப் போட்டியின் போது, கேலரியில் இருந்த ரசிகர் ஒருவர் அர்ஷ்தீப்பை நோக்கி அநாகரீகமான முறையில் தொடர்ந்து கருத்துக்களைத் தெரிவித்துள்ளார். தொடக்கத்தில் பொறுமை காத்த அர்ஷ்தீப், ஒரு கட்டத்தில் பொறுமை இழந்து அந்த ரசிகரை நோக்கி மிகவும் காட்டமான மற்றும் கடுமையான வார்த்தைகளால் பதிலடி கொடுத்துள்ளார்.

“>

இந்தச் சம்பவம் தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், கிரிக்கெட் ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்கள் எழுந்துள்ளன. ஒரு தரப்பினர், வீரர்கள் மைதானத்தில் தங்கள் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்த வேண்டும் என்றும், இது போன்ற அநாகரீகமான வார்த்தைகளைப் பயன்படுத்துவது விளையாட்டு உணர்வுக்கு எதிரானது என்றும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

அதே வேளையில், மற்றொரு தரப்பினர் வீரர்கள் மீது தேவையற்ற முறையில் தனிப்பட்ட தாக்குதல்களைத் தொடுக்கும் ரசிகர்களைக் கண்டிக்க வேண்டும் என்றும், தொடர்ந்து சீண்டப்படும் போது எத்தகைய வீரரும் ஆத்திரமடைவது இயல்பானது என்றும் அர்ஷ்தீப் சிங்கிற்கு ஆதரவாக குரல் கொடுத்து வருகின்றனர்.