வங்கதேசத்தின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா, இந்தியாவில் தஞ்சம் புகுந்துள்ள நிலையில், தற்போதைய வங்கதேச இடைக்கால அரசுக்கும் தனது அரசியல் எதிரிகளுக்கும் கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளார். தனது மௌனத்தை யாரும் பலவீனம் என்று தவறாகக் கருதிவிடக் கூடாது எனக் குறிப்பிட்டுள்ள அவர், மிக விரைவில் வங்கதேசத்திற்குத் திரும்பப் போவதாக உறுதியளித்துள்ளார்.
மேலும் 2024-ஆம் ஆண்டு நடைபெற்ற மாணவர் போராட்டங்களுக்குப் பிறகு நாட்டை விட்டு வெளியேறிய அவர், வங்கதேசத்தில் ஜனநாயகம், பேச்சுரிமை மற்றும் சட்டத்தின் ஆட்சி மீண்டும் நிலைநாட்டப்படுவதே தனது வருகைக்கான முக்கிய நோக்கமாக இருக்கும் என்று தெரிவித்துள்ளார். மேலும், தன் மீதான குற்றச்சாட்டுகளுக்குப் பயந்து தப்பியோடவில்லை என்றும், தனது மக்கள் மற்றும் நாட்டின் இறையாண்மையைப் பாதுகாப்பதற்காக சர்வதேச அளவிலும் ராஜதந்திர ரீதியிலும் தொடர்ந்து போராடி வருவதாகவும் அவர் திட்டவட்டமாகக் கூறியுள்ளார்.
தற்போது முகமது யூனுஸ் தலைமையில் அமைந்துள்ள இடைக்கால அரசு, தனது அவாமி லீக் கட்சியின் தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் மீது திட்டமிட்ட அரசியல் பழிவாங்கல்களை நடத்தி வருவதாக ஷேக் ஹசீனா குற்றம் சாட்டியுள்ளார். சுமார் 600-க்கும் மேற்பட்ட கட்சித் தொண்டர்கள் கொல்லப்பட்டுள்ளதாகவும், ஒன்றரை லட்சத்திற்கும் அதிகமானோர் மீது பொய் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கவலை தெரிவித்துள்ளார்.
இதனால் தற்போதைய அரசு நாட்டின் பொருளாதாரத்தைச் சீர்குலைத்து, அவாமி லீக் கட்சியின் மீதான பயத்தின் காரணமாகவே அதற்குத் தடை விதித்துள்ளதாகக் கூறிய அவர், வெறும் காகித உத்தரவுகளால் மக்களின் ஆதரவைப் பெற்ற ஒரு பேரியக்கத்தை அழித்துவிட முடியாது என்று சுட்டிக்காட்டியுள்ளார். வங்கதேசத்தில் மீண்டும் ஒரு ஜனநாயகச் சூழல் உருவாகும் போது, தன் கட்சித் தலைவர்கள் அனைவரும் தாயகம் திரும்புவார்கள் என்றும், அவாமி லீக் கட்சி தற்காலிக சவால்களால் ஒருபோதும் உடையாது என்றும் அவர் தனது அறிக்கையில் ஆணித்தரமாகத் தெரிவித்துள்ளார்.
