அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல யூடியூப் நெசவுத் திறமையாளர் டோன்னா ஜோர்டன் மரணமானதை அவரது கணவர் மாட் ஜோர்டன் ஒரு வீடியோவின் முடிவில் அறிவித்தது சமூக வலைதளங்களில் பெரும் பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது. டோன்னா ஜோர்டன் தனது குடும்பத்தினருடன் இணைந்து Jordan Fabrics என்ற நெசவுத் தொழில் நிறுவனத்தை நடத்தி வந்தார். நெசவு  மற்றும் க்வில்ட் செய்முறைகளை தன்னுடைய யூடியூப் சேனலில் பதிவிட்டு, பலரும் தெரிந்து கொள்வதற்கான வழிகாட்டியாக இருந்தார்.

மார்ச் 18, 2025 அன்று அவரது இறுதி வீடியோ “Celebration Of Life: Donna Jordan – Drop Diamonds” என்ற தலைப்பில் வெளியிடப்பட்டது. அந்த வீடியோவின் அவரது கணவர் மாட் ஜோர்டன் தோன்றி, டோன்னா இறந்த விஷயத்தை கூறியுள்ளார். மேலும், “டோன்னா சில வருடங்களாக ஒரு நோயுடன் போராடி வந்தார். கடந்த மூன்று மாதங்களில் அது கடுமையானதாக மாறியது,” என உருக்கமாக கூறிய அவர், “அவர் தனது வேலை மீது கொண்ட அன்பும், அதனால் கிடைத்த மகிழ்ச்சியும் மிகுந்தது,” என்றார்.

இவ்வீடியோ தற்போது 5 மில்லியன் பார்வைகளை கடந்துள்ள நிலையில், பலரும் தங்கள் இரங்கல்களைத் தெரிவித்து வருகின்றனர். “அந்த வீடியோ எவ்வளவு கடினமாக இருந்திருக்கும்…” என ஒருவர் பதிவிட்டுள்ளார். மேலும், “அவரது பணியை குடும்பத்தினர் தொடரப்போகிறார்கள் என்ற தகவல் நம்மை சற்று நிம்மதியாக இருக்க வைக்கிறது,” என்றும் மற்றொரு பயனர் குறிப்பிட்டுள்ளார்.