நோய்டாவைச் சேர்ந்த 33 வயதான திருமணமான பெண் ட்விஷா சர்மா, கடந்த மே 12 அன்று மத்தியப் பிரதேச மாநிலம் போபாலில் உள்ள கத்தாரா ஹில்ஸ் பகுதியில் உள்ள அவரது கணவர் வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். அவர் தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்பட்டாலும், அது திட்டமிட்ட கொலை என்று ட்விஷாவின் பெற்றோர் தரப்பில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள ட்விஷாவின் கணவர் சமர்த் சிங்கை பிடிப்பதற்காக போபால் போலீஸார் 6 தனிப்படைகளை அமைத்துள்ளனர். மேலும், சமர்த் சிங் குறித்து தகவல் கொடுப்பவர்களுக்கு ₹10,000 சன்மானம் வழங்கப்படும் என்றும் போலீஸார் அறிவித்துள்ளனர். இச்சூழ்நிலையில், ட்விஷாவின் மாமியாரும் ஓய்வுபெற்ற நீதிபதியுமான கிரிபாலா சிங் இந்த வழக்கில் சில திடுக்கிடும் கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.
ட்விஷா சர்மா இறந்து எட்டு நாட்கள் கடந்தும் அவரது கணவர் சமர்த் தொடர்ந்து தலைமறைவாக உள்ளார். வரதட்சணை கொடுமை மற்றும் சித்திரவதை பிரிவுகளின் கீழ் சமர்த் மற்றும் அவரது தாய் கிரிபாலா சிங் மீது மே 14 அன்று போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சமர்த் வெளிநாட்டுக்கு தப்பி ஓடாமல் இருக்க பாஸ்போர்ட் அலுவலகத்தின் உதவியையும் போலீஸார் நாடியுள்ளனர்.
இதற்கிடையில், போபாலில் நடந்த முதற்கட்ட பிரேத பரிசோதனையில் தங்களுக்கு நம்பிக்கையில்லை என்றும், அதில் பாரபட்சம் நிலவ வாய்ப்புள்ளதாகவும் ட்விஷாவின் குடும்பத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர். முதல் பிரேத பரிசோதனையின் போது கிரிபாலா சிங்கின் சகோதரியான (அரசு மருத்துவர்) ஒருவர் அங்கு நடமாடியதாக அவர்களின் வழக்கறிஞர் தெரிவித்துள்ளார். இதனால், ட்விஷாவின் உடலை வாங்க மறுத்த குடும்பத்தினர், டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் மறுபிரேத பரிசோதனை செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
தன் மீதும் தன் மகன் மீதும் சுமத்தப்பட்ட வரதட்சணைக் குற்றச்சாட்டுகளை ஓய்வுபெற்ற நீதிபதி கிரிபாலா சிங் திட்டவட்டமாக மறுத்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் “திருமணமான 5 மாதங்களிலேயே ட்விஷா மிகவும் தன்னிச்சையான, கட்டுக்கடங்காத எண்ணங்களைக் கொண்டவர் என்பதை நான் உணர்ந்தேன். கடந்த 17-ஆம் தேதி தான் கர்ப்பமாக இருப்பதை அவர் உறுதி செய்த விநாடியில் இருந்து அவரது நடத்தை முற்றிலும் மாறியது.
தனக்கு இந்த குழந்தை வேண்டாம் என்று பிடிவாதம் பிடித்தார். அன்றைய தினம் மாலை நான் அலுவலகத்தில் இருந்து வந்தபோது, அவர் தன்னைத்தானே அடித்துக் கொண்டு, ‘என்னால் இனி இப்படி வாழ முடியாது’ என்று கத்தினார். பிடிக்கவில்லை என்றால் உனக்கு நாளைக்கே டிக்கெட் போட்டுத் தருகிறேன், மரியாதையாக அம்மா வீட்டுக்கே சென்றுவிடு என்று நான் கூறினேன்.
தொடர்ந்து பேசிய கிரிபாலா சிங், “அதன் பிறகு நள்ளிரவில் அவர் எங்கு சென்றார் என்றே எங்களுக்குத் தெரியவில்லை. அவரது தாய்க்கும் இது தெரியாது. ட்விஷா எப்போதும் தன் இஷ்டப்படியே, மிக அலட்சியமாக முடிவெடுப்பவர். மே 30 அன்று என் மகன் சமர்த் வந்தவுடன், மீண்டும் மருத்துவமனைக்குச் சென்று ‘கருக்கலைப்பு செய்ய வேண்டும் என்று ட்விஷாவின் தாய் வற்புறுத்தினார்.
ஆண்கள் எப்போதும் தங்கள் வேதனையை கண்ணீரால் வெளிப்படுத்துவதில்லை. என் மகன் ஆரம்பத்திலிருந்தே ட்விஷாவின் பிடிவாத குணத்தை சகித்துக் கொண்டு, அவளை மாற்ற முயன்றான். ஆனால் அவளிடம் எந்த மாற்றமும் இல்லை. இந்த மருத்துவ கருக்கலைப்பு விவகாரமே வீட்டில் அசாதாரண சூழலை உருவாக்கியது. உண்மையில் இந்த விவகாரத்தில் மக்கள் அனுதாபம் எங்களுக்கே கிடைத்திருக்க வேண்டும் என்று வாதிட்டுள்ளார். மாமியாரின் இந்த வாக்குமூலம் ஒருபுறம் இருக்க, மருமகளின் மர்ம மரணம் குறித்து போபால் போலீஸார் அனைத்து கோணங்களிலும் தீவிர விசாரணையை முடுக்கிவிட்டுள்ளனர்.
