தெலுங்கானாவின் நல்கொண்டா மாவட்டம் கொல்லகுடேமை கிராமத்தில் நடந்த  ஒரு சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த பகுதியில் வசித்து வரும் மூதாட்டி கங்கம்மா, தனது கோழியை கையில் ஏந்தியவாறே, போலீஸ் நிலையம் வந்துள்ளார்.

இரு கால்களும் உடைந்த நிலையில் அந்தக் கோழி துடிக்க, அதற்கு நீதி வேண்டும் என கோரிய அந்தப் பெண், தனது பக்கத்து வீட்டுக்காரர் ராகேஷ் மீது புகார் அளித்தார். இந்தக் காணொளி இணையத்தில் பரவியதிலிருந்து, பலரும் அந்த பெண்ணின் உணர்வுக்கும், கோழியின் நிலைக்கும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

மூதாட்டி கங்கம்மா கூறியதாவது, “தினமும் அந்தக் கோழி வெளியே சென்று, மாலை வீட்டிற்கு திரும்பும். ஆனால், பக்கத்து வீட்டில் இருந்த ராகேஷுக்கு கோழி தானியங்களை கொத்துவதாக கோபம். அதனால் ஒரு நாள் கோழியை மரக்குச்சியால் கடுமையாக அடித்தார்.

அதன் இரு கால்களும் முறிந்துவிட்டது. என் மனம் வெறுத்துவிட்டது.  அதை என் பிள்ளையைப் போலவே வளர்த்தேன். அதனால் தான் நான் போலீசில் நேரில் வந்து புகார் அளிக்க முடிவு செய்தேன்” என்று தெரிவித்தார்.

கங்கம்மாவின் மனவேதனையை கேட்ட போலீசார், கோழிக்கு உடனடி சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்துள்ளனர். மேலும், கிராமத்திலேயே தகராறு தீர்க்கப்படும் வகையில் பஞ்சாயத்துக்கு அனுப்பி விசாரணை நடத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம், விலங்குகளுக்கு எதிரான வன்கொடுமை தொடர்பாக விழிப்புணர்வை ஏற்படுத்தி உள்ளது. ஒருவர் ஒரு செல்லப் பிராணியை எப்படி பாசமுடன் கவனித்து வளர்க்கிறார் என்பதையும், அதற்கு நேரும் அநீதிக்கு எதிராக அந்த பாசத்தை நம்பி நின்ற அவரின் மன வலிமையையும் இந்த நிகழ்வு சுட்டிக்காட்டுகிறது.