ராமநாதபுரம் மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்து கொண்டிருக்கிறது. நேற்று முன்தினம் பரமக்குடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மழை பெய்தது. இந்த நிலையில் மேலாய்குடி பகுதியில் விவசாய கூலி வேலை பார்க்கும் பால்ராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மனைவி மற்றும் 6 வயதுடைய கீர்த்திகா என்ற மகள் இருந்துள்ளார். இந்த சிறுமி அப்பகுதியில் இருக்கும் பள்ளியில் ஒன்றாம் வகுப்பு படித்து வந்துள்ளார்.

கடந்த 2 நாட்களாக பெய்த மழை காரணமாக வீட்டின் மண் சுவர் இடிந்து தூங்கிக் கொண்டிருந்த சிறுமியின் மீது விழுந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் இடிபாடுகளில் சிக்கிய மகளை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிறுமியை பரிசோதனை செய்த டாக்டர்கள் கீர்த்திகா ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.