பிரதமர் மோடி மக்களவையில் கூறியதாவது, கோடிக்கணக்கான மக்களின் வருகையால் மகா கும்பமேளா சிறப்படைந்தது. இதற்காக உத்தர பிரதேச மக்களுக்கும் நான் நன்றி கூறி கொள்கிறேன். மகா கும்பமேளாவிற்கு வருகை தந்தவர்கள் அயோத்தி ராமர் கோவிலுக்கும் சென்றனர். மகா கும்பமேளாவின் வெற்றிக்கு பங்காற்றிய ஒவ்வொருவருக்கும் நன்றி கூறிக் கொள்கிறேன். மகா கும்பமேளாவின் வெற்றியில் அனைவருடைய பங்கும் அடங்கி இருக்கிறது.

அரசு, சமுதாயம், மக்கள் மற்றும் அரசு அதிகாரிகள் என அனைவருடைய பங்கும் உள்ளது. கங்கா தேவியை பூமிக்கு கொண்டு வருவதற்கு பகிரத மன்னன் முயற்சி மேற்கொண்டது நம் எல்லோருக்கும் நன்கு தெரியும். அதே போன்று ஒரு பகிரத முயற்சியை இந்த மகா கும்பமேளாவில் நாம் பார்த்தோம். மிகப்பெரிய இலக்குகளை நோக்கிய தேசிய நலனின் அடையாளமாக மகா கும்பமேளா விளங்கியது என கூறியுள்ளார்.