“பாகிஸ்தான் விரித்த தேன்வலையில் சிக்காமல், மிரட்டல்களுக்கும் பண ஆசைக்கும் அடிபணியாமல் ஐஎஸ்ஐ உளவு அமைப்பை அலறவிட்டுள்ளார்” ஜம்முவின் தோடா மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு வாலிபர். பாதுகாப்பு காரணங்களுக்காகப் பெயர் மறைக்கப்பட்டுள்ள இந்த 30 வயது இளைஞரின் சமூக வலைத்தள பக்கத்தில், கடந்த டிசம்பர் மாதம் அவர் பதிவிட்ட பனிப்பொழிவு வீடியோவிற்கு காஷ்மீரைச் சேர்ந்த பெண் போல ஒரு கணக்கிலிருந்து கமெண்ட் வந்துள்ளது.

அதன் பிறகு ஃபேஸ்புக்கில் தொடங்கிய நட்பு, கடந்த மார்ச் மாதம் வாட்ஸ்அப் எண்களைப் பரிமாறும் அளவிற்குச் சென்றுள்ளது. ஆனால், அந்த பெண்ணின் வாட்ஸ்அப் எண் பாகிஸ்தானின் நாட்டு குறியீடான ‘+92’ என்று இருந்ததைக் கண்டு அந்த இளைஞர் அதிர்ச்சியடைந்துள்ளார். ​அவர் அவளை நேருக்கு நேர் கேள்வி கேட்டபோது, இந்திய ராணுவத்தின் நடமாட்டங்களையும் புகைப்படங்களையும் அனுப்பினால் பெரும் தொகை தருவதாக ஆசை வார்த்தை கூறப்பட்டுள்ளது.

இதற்கு உடன்படாத அந்த வாலிபர் அந்த எண்ணை உடனடியாக பிளாக் செய்துள்ளார். ஆனாலும், பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ (ISI) அமைப்பு வெவ்வேறு எண்களில் இருந்து அவருக்குத் தொடர்ந்து பண ஆசையும், கொலை மிரட்டல்களும் விடுத்து டார்ச்சர் செய்து வந்துள்ளது. இதற்கிடையில், பாகிஸ்தானில் இருந்து வந்த வாட்ஸ்அப் அழைப்புகளை இடைமறித்த இந்தியப் பாதுகாப்புப் படையினர், அந்த வாலிபரின் வீட்டை அதிரடியாகச் சோதனையிட்டு அவரைத் தனிப்படை காவலில் எடுத்து விசாரித்தனர்.

தீவிர விசாரணைக்குப் பிறகு, அவர் எந்தவித தேசவிரோத செயலிலும் ஈடுபடவில்லை என்பதும், பாகிஸ்தானின் மிரட்டல்களைத் துணிச்சலாக எதிர்த்துள்ளார் என்பதும் உறுதியானதால் போலீஸார் அவரை விடுவித்துள்ளனர். ஜம்மு காஷ்மீரில் இதுபோன்று ஸ்னாப்சாட், வாட்ஸ்அப் மூலம் இளைஞர்களைத் தேன்வலையில் (Honeytrap) வீழ்த்தும் பாகிஸ்தானின் சதித்தொடர் அண்மைக் காலமாக அதிகரித்து வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.