கர்நாடக மாநிலம் சித்ரதுர்கா பகுதியில் உள்ள ஒரு தனியார் ஆயுர்வேத மருத்துவக் கல்லூரியில் இறுதியாண்டு படித்து வந்த 22 வயது மாணவி ஒருவர், தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அந்த மாணவிக்கும், அவர் படிக்கும் கல்லூரியின் பேராசிரியர் ஒருவருக்கும் இடையே தவறான தொடர்பு இருப்பதாகச் சில மாணவர்கள் மற்றும் அந்தப் பேராசிரியரின் மனைவி ஆகியோர் வதந்தி பரப்பியதாகக் கூறப்படுகிறது.

இந்தத் தேவையற்ற கிசுகிசுக்களால் மனமுடைந்த மாணவி, தனக்கு நேர்ந்த அவமானத்தைத் தாங்க முடியாமல் இந்த விபரீத முடிவை எடுத்துள்ளார். உயிரிழப்பதற்கு முன்னதாக அவர் எழுதியுள்ள கடிதத்தில், பேராசிரியரின் மனைவி மற்றும் வதந்தி பரப்பிய சக மாணவர்கள் என மொத்தம் 6 பேரின் பெயர்களைக் குறிப்பிட்டு, அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியுள்ளார்.

இது குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள போலீஸார், அந்த 6 பேரையும் தேடி வருகின்றனர். ஒரு திறமையான மருத்துவ மாணவி வதந்திகளால் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.