அன்பும் காதலும் ஒருபுறம் இருந்தாலும், கணவனின் இரவு நேரச் செயல்களால் தான் பெரும் துயரத்திற்கு ஆளாகி வருவதாகப் பெண் ஒருவர் சமூக வலைதளத்தில் புலம்பியது தற்போது வைரலாகி வருகிறது. இங்கிலாந்தைச் சேர்ந்த ‘மம்ஸ்நெட்’ (Mumsnet) தளத்தில் அப்பெண் பதிவிட்டுள்ள உருக்கமான பதிவில், “என் கணவரை எனக்கு மிகவும் பிடிக்கும், ஆனால் அவருடன் படுக்கையைப் பகிர்ந்துகொள்வது ஒரு சித்திரவதையாக மாறிவிட்டது. தோள்பட்டை வலியால் இரவு முழுவதும் அவர் புரண்டு படுப்பதும், அதிகப்படியான குறட்டை, தூக்கத்தில் வரும் அசௌகரியமான சத்தங்கள் மற்றும் அடிக்கடி விளக்கைப்போட்டு கழிவறைக்குச் செல்வது என எனது தூக்கத்தை அவர் நரகமாக்கிவிட்டார்” எனத் தெரிவித்துள்ளார்.
மேலும், அதிகாலை 5 மணிக்கே அலாரத்தை வைத்துவிட்டு, அதை அணைக்காமல் ‘ஸ்னூஸ்’ (Snooze) போட்டுத் தூங்கும் கணவரின் பழக்கத்தால் தனது உடல்நலம் பாதிக்கப்படுவதாகவும், பகல் நேரங்களில் வேலை செய்ய முடியாமல் தவிப்பதாகவும் அவர் வேதனை தெரிவித்துள்ளார். “தனித்தனி அறையில் தூங்குவது விவாகரத்திற்கு வழிவகுக்கும் எனப் படித்திருக்கிறேன், ஆனால் தூக்கமில்லாததால் என் ஆரோக்கியம் கெடுகிறது. கணவனின் மனதைப் புண்படுத்தாமல் எப்படி ‘தூக்க விவாகரத்து’ (Sleep Divorce) பெறுவது?” என அவர் கேட்டுள்ள கேள்விக்கு, பல இல்லத்தரசிகள் “உடல்நலமே முக்கியம், தனி அறைக்கு மாறுவதில் தவறில்லை” என ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
