தமிழக சட்டமன்றத் தேர்தல் நாளை மறுதினம் நடைபெறவுள்ள நிலையில், கரூர் தொகுதியில் அதிமுக மற்றும் திமுக இடையே மோதல் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. இன்று செய்தியாளர்களைச் சந்தித்த கரூர் அதிமுக வேட்பாளர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், தனது உயிருக்கு எந்த நேரத்திலும் ஆபத்து இருப்பதாகக் கூறி பரபரப்பைக் கிளப்பியுள்ளார்.
“என்னைத் தீர்த்துக்கட்ட முயற்சி நடக்கிறது; எனக்கோ, என் குடும்பத்திற்கோ அல்லது என்னைச் சார்ந்தவர்களுக்கோ ஏதேனும் ஆபத்து நேர்ந்தால் அதற்கு செந்தில் பாலாஜியும், அவரது தம்பி அசோக்குமாரும்தான் முழு பொறுப்பு” என அவர் ஆக்ரோஷமாகத் தெரிவித்தார்.
நேற்று கோயில் நில விவகாரம் தொடர்பாகச் சென்றபோது தன் மீது தாக்குதல் நடத்த முயற்சி நடந்ததாகவும், அதனால் தற்போது துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
தோல்வி பயம் காரணமாக செந்தில் பாலாஜி கரூரை விட்டு கோவைக்குச் சென்றுவிட்டதாகவும், வன்முறையைத் தூண்டி தேர்தலை நிறுத்த திமுகவினர் சதி செய்வதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.
தேர்தலுக்கு இன்னும் ஒரு நாளே உள்ள நிலையில், ஆளுங்கட்சி புள்ளி மீது முன்னாள் அமைச்சர் சுமத்தியுள்ள இந்த நேரடி கொலை முயற்சி புகார், கரூர் தேர்தல் களத்தில் பெரும் பரபரப்பையும் பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
