மும்பை வான்கேடே மைதானத்தில் நடைபெற்ற இரண்டாவது அரையிறுதிப் போட்டியில், இங்கிலாந்தை 7 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா வரலாற்று வெற்றியைப் பெற்றுள்ளது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, சஞ்சு சாம்சனின் அதிரடி 89 ரன்கள் உதவியுடன் 253 ரன்களைக் குவித்தது.
இலக்கைத் துரத்திய இங்கிலாந்து அணியின் ஜேக்கப் பெத்தேல் சதம் அடித்து மிரட்டினாலும், பும்ரா மற்றும் அர்ஷ்தீப் சிங்கின் துல்லியமான பந்துவீச்சால் இந்தியா வெற்றி பெற்றது. போட்டிக்குப் பின் பேசிய கேப்டன் சூர்யா, “ஆட்டத்தின் போது எனது இதயத்துடிப்பு 160 முதல் 175 வரை இருந்தது; அவ்வளவு பதற்றமாக இருந்தது” எனத் தெரிவித்தார்.
மேலும், இங்கிலாந்து வீரர் ஹாரி புரூக்கிடம் விளையாட்டாக, “நாங்கள் இன்னும் எவ்வளவு ரன்கள் எடுத்தால் நீங்கள் திருப்தி அடைவீர்கள்?” என்று கேட்டதாகக் கூறிச் சிரிப்பை ஏற்படுத்தினார்.
அக்சர் படேலின் அபாரமான கேட்சுகளையும், பீல்டிங் பயிற்சியாளர் டி.திலீப்பின் உழைப்பையும் பாராட்டிய சூர்யா, மார்ச் 8-ம் தேதி அகமதாபாத்தில் நடைபெறவுள்ள நியூசிலாந்துக்கு எதிரான இறுதிப்போட்டிக்காக ஒட்டுமொத்த அணியும் ஆவலுடன் இருப்பதாகத் தெரிவித்தார்.
2023 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியாவிடம் இழந்த கோப்பையை, அதே அகமதாபாத்தில் மீண்டும் வெல்ல இந்தியாவிற்கு ஒரு பொன்னான வாய்ப்பு கிடைத்துள்ளது.
