2023  உலகக் கோப்பைக்கு முன்னதாக கேப்டன் தின நிகழ்ச்சியின் போது தென்னாப்பிரிக்க அணியின் கேப்டன் டெம்பா பவுமா மேடையில் தூங்கியதாக கூறப்பட்ட நிலையில், அதற்கு அவரே விளக்கமளித்துள்ளார்.

இந்தியாவில் 2023 உலககோப்பை நாளை முதல் தொடங்கவுள்ள நிலையில், உலகக் கோப்பையில் பங்கேற்கும் 10 அணிகளின் கேப்டன்கள் பங்கேற்ற கேப்டன்கள் தின நிகழ்ச்சி இன்று ஹைதராபாத்தில் நடைபெற்றது. இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி மற்றும் இங்கிலாந்து அணியின் முன்னாள் தலைவர் இயான் மோர்கன் ஆகியோர் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினர்.

இதில் ஒவ்வொரு  கேப்டன்களும்  அணி குறித்தும், மற்ற கேப்டன்களிடமும் ஜாலியாக பேசி மகிழ்ந்தனர். அப்போது  ஒரு மேடையில் கூடி பேசிக் கொண்டிருக்கும் போது பவுமா தலையை கீழே குனிந்து கொண்டிருந்தார். இதனைப் பார்க்கும் போது தூங்குவது போலத்தான் இருந்தது. மற்ற கேப்டன்கள் சோபாவில் ஜோடியாக அமர்ந்திருக்க, நடுவில் டெம்பா பவுமா ஒரு நாற்காலியில் தனியாக அமர்ந்திருக்கும்போது ஒரு குட்டி தூக்கத்தை போட்டதாக கூறப்பட்டது. இந்த புகைப்படம் வைரலாகி வருகிறது. இதுகுறித்து ரசிகர்கள் பலரும் கிண்டலாக கருத்துக்களை கூறி வருகின்றனர்.

இந்நிலையில் டெம்பா பவுமா நான் தூங்கவில்லை என விளக்கமளித்துள்ளார். England’s Barmy Army என்ற எக்ஸ் பக்கத்தில் பவுமாவின் புகைப்படத்தை பகிர்ந்து, உலகக் கோப்பை கேப்டன் மாநாட்டில் டெம்பா பவுமா இப்போதுதான் தூங்கிவிட்டார் என பதிவிட்டிருந்தது. அந்த பதிவிற்கு கீழ் கமெண்ட் செய்த பவுமா, நான் கேமரா கோணத்தை குறை கூறுகிறேன், நான் தூங்கவில்லை என்று தெரிவித்தார்… அதேபோல சில நெட்டிசன்களும் வீடியோவை பதிவிட்டு பவுமா தூங்கவில்லை, அவர் தலையை குனிந்து இருப்பதால் அப்படி தெரிகிறது என்று கூறி வருகின்றனர்.

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் புதன்கிழமை தொடங்குகிறது. முதல் போட்டியில் இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன. கடந்த சில நாட்களுக்கு முன்பு தென்னாப்பிரிக்கா சென்று தனது குடும்பத்தினரை சந்திக்க சென்ற பவுமா, கடந்த நாள் இந்தியா திரும்பினார். தென்னாப்பிரிக்க அணி டெல்லியில் பயிற்சியில் ஈடுபட்டுள்ளது. கேப்டன் தின நிகழ்வுக்காக பவுமா மீண்டும் அகமதாபாத்திற்கு பறந்தார்.

உலக கோப்பை அணியில் இந்தியாவில் விளையாடிய அனுபவம் உள்ளவர்கள் இருப்பதாக நிகழ்ச்சியில் பவுமா கூறினார். தென்னாப்பிரிக்க வீரர்களின் முந்தைய அனுபவம் ஐபிஎல்லில் விளையாடியது அணிக்கு பிளஸ் பாயிண்ட் என்பது பவுமாவின் நிலைப்பாடு. ஆனால் உலகக் கோப்பையில் உள்ள அனைத்து அணிகளிலும் ஐபிஎல்லில் விளையாடிய வீரர்கள் இருப்பதால், தென்னாப்பிரிக்காவுக்கு மட்டும் இது சாதகமாக இருக்காது என்று பவுமா கூறினார். தென்னாப்பிரிக்காவின் முதல் போட்டி அக்டோபர் 7-ம் தேதி டெல்லியில் நடக்கிறது.எதிரணியாக இலங்கை உள்ளது.