இந்தியாவின் விருந்தோம்பல் நன்றாக இருந்தது என்று பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் இந்தியாவைப் பாராட்டினார்.

2023 ஐசிசி உலகக் கோப்பையில் புதன்கிழமை கேப்டன் தினத்தையொட்டி (captain’s day) அனைத்து 10 அணிகளின் கேப்டன்களும் கூடினர். இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி மற்றும் இங்கிலாந்து அணியின் முன்னாள் தலைவர் இயான் மோர்கன் ஆகியோர் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினர். இந்த நிலையில் அனைத்து அணிகளின் கேப்டன்களும் தமது கருத்துக்களை தெரிவித்துள்ளனர். இந்நிலையில், பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் இந்தியாவை வெகுவாக பாராட்டியுள்ளார். மேலும், அவர் டீம் இந்தியாவுக்கு எதிரான போட்டியில் தனது ஆர்வத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

28 வயதான பாபர் அசாம் கூறியதாவது, “விருந்தோம்பல் நன்றாக இருந்தது. இந்த அளவுக்கு நாங்கள் எதிர்பார்க்கவில்லை, நாங்கள் வீட்டில் மட்டுமே இருப்பதாக உணர்கிறோம். நம் ரசிகர்கள் வந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். ஹைதராபாத் பிரியாணி நல்ல சுவையாக இருக்கிறது. இந்தியாவுக்கு எதிரான பாகிஸ்தானின் மோதலில் நான் மிகவும் உற்சாகமாக இருக்கிறேன், ஆனால் அந்த போட்டிக்கு முன், பாகிஸ்தான் இன்னும் 2 போட்டிகளை விளையாட வேண்டும், எனவே நாங்கள் போட்டிக்கு போட்டியாக எடுத்துக்கொள்கிறோம்” என்று கூறினார்.

அவர் மேலும் கூறுகையில், “எந்த அழுத்தமும் இல்லை. சூழ்நிலைகளில் பெரிய வித்தியாசம் இல்லை. அதிக ஸ்கோரிங் போட்டிகள் இருக்கலாம். எங்கள் திட்டங்களை செயல்படுத்த முயற்சிப்போம்” என்று கூறினார்,

ஐசிசி உலகக் கோப்பை 2023 அக்டோபர் 5 முதல் (நாளை) தொடங்குகிறது. இந்த தொடரின்  முதல் போட்டி இங்கிலாந்து – நியூசிலாந்து இடையே அகமதாபாத்தில் நடைபெறும், அதே நேரத்தில் பாகிஸ்தான் அணி தனது பயணத்தை நெதர்லாந்திற்கு எதிரான போட்டியுடன் அக்டோபர் 6ஆம் தேதி ஹைதராபாத்தில் தொடங்கும். மேலும் இந்தியா – பாகிஸ்தான் போட்டி அக்டோபர் 14ஆம் தேதி அகமதாபாத்தில் மோதுகிறது.