சென்னை பல்கலைக்கழக 165 வது பட்டமளிப்பு விழா நேற்று நடைபெற்ற நிலையில் அதில் கலந்து கொண்டு பேசிய முதல்வர் ஸ்டாலின், முன்னாள் முதல்வர் அண்ணா இந்த பல்கலைக்கழகத்தில் தான் படித்தார். நானும் இதே பல்கலைக்கழகம் முன்னாள் மாணவர் தான். அந்த காலத்தில் சென்னை பல்கலைக்கழகம் மட்டும்தான் இருந்தது. தற்போது தமிழகத்தில் மாநில அரசு சார்பாக 22 பல்கலைக்கழகங்கள் இயங்கி வருகின்றன. இந்தியாவிலேயே உயர்கல்வியில் தமிழகம் சிறந்த மாநிலமாக விளங்குகிறது.

அரசு பள்ளிகளில் படித்து கல்லூரிக்கு வரும் மாணவிகளுக்கு மாதம்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கும் புதுமைப்பெண் திட்டம் செயல்படுத்தப்பட்டு பெண் கல்வி ஊக்குவிக்கப்பட்டு வருகிறது. பட்டம் வாங்குவதுடன் மாணவர்களின் படிப்பு முடிந்து விடுவது இல்லை. ஒரே பட்டத்துடன் நிறுத்தி விடக்கூடாது எனவும் தொடர்ந்து படிக்க வேண்டும் தகுதியான வேலை கிடைத்தாலும் படிப்பதை நிறுத்தி விடக்கூடாது. யாராலும் பறிக்க முடியாத சொத்து என்பது கல்வியறிவு மட்டும் தான். அது அறிவியல் வழிபட்டதாக பகுத்தறிவாக எதையும் கேள்வி கேட்டு ஆராயும் அறிவாக இருக்குமானால் நம்மை யாராலும் வெல்ல முடியாது என்று முதல்வர் ஸ்டாலின் மாணவர்களிடம் கலந்து உரையாடினார்.