லக்னோவின்  உள்ள ஒரு  ஹோட்டலில் கடந்த வியாழக்கிழமை அதிகாலை 1 மணி அளவில் நடந்த மோதல், பரிதாபமாக ஒரு ஊழியரின் உயிரை பலி வாங்கி சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அயோத்தியைச் சேர்ந்த ஆகாஷ் திவாரி எனும் இளைஞர், அந்த ஹோட்டலில் தங்கியிருந்த ஒரு பெண்ணை சந்திக்க வந்துள்ளார். ஆனால் அங்கு பணிபுரிந்து வந்த ஹோட்டல் ஊழியர் திவாகர் யாதவ் இரவு நேரம் என்பதால்  அவனை உள்ளே செல்ல அனுமதிக்கவில்லை அதைத்தொடர்ந்து  வாக்குவாதம், சில நிமிடங்களில் கோர சம்பவமாக மாறியது.

தகராறுக்குப் பிறகு, ஹோட்டலுக்கு வெளியே சென்ற ஆகாஷ், திடீரென துப்பாக்கியை எடுத்து திவாகரை கழுத்தில் நேரில் சுட்டுள்ளார். இதனால் ரத்த வெள்ளத்தில் சரிந்து  விழுந்த நிலையில், உடனடியாக லோஹியா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார், இருப்பினும் அப்பாவி திவாகர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டது.

போலீசார் நடத்திய விசாரணையில், சம்பவத்தின் போது ஆகாஷும், அவரது பெண் தோழியும் மது போதையில் இருந்தது தெரியவந்துள்ளது. இருவரும் கைது செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் சேகரிக்கப்பட்டுள்ளன. மேலும், திவாகரின் குடும்பத்தினருக்கு அவரது கொலை குறித்த தகவல்  தெரிவிக்கப்பட்டது. திவாகர் சுல்தான்பூரைச் சேர்ந்தவர் என்றும், கடந்த நான்கு மாதங்களாக ஹோட்டலில் பணியாற்றி வந்துள்ளார் என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர். குற்றவாளியின் வாக்குமூலம் மற்றும் ஹோட்டல் பணியாளர்களிடம் இருந்து மேலும் விசாரணை நடைபெற்று வருகின்றது.