உத்தரபிரதேச மாநிலம் அவுராயா மாவட்டம் அச்சல்டா காவல் நிலையப் பகுதியில் ஏற்பட்ட ஒரு சம்பவம், அனைவரையும் கண்கலங்க வைத்திருக்கிறது. ஜூலை 16-ம் தேதி காலை 5.30 மணியளவில், 7 வயதான ரோஷ்னி என்ற சிறுமி ரயில் பாதைக்கு அருகில் சென்று தற்கொலை செய்யும் நோக்கத்தில் நடந்துசென்றார். அப்போது  அவளை சாலையில் சென்ற மக்கள் பார்த்து காப்பாற்றினர். தகவலறிந்த போலீசார், அவளை பாதுகாப்புடன் காவல் நிலையத்திற்குக் கொண்டு சென்றனர். சிறுமியின் பேச்சுகள் போலீசாரையும் பொதுமக்களையும் சோகத்தில் ஆழ்த்தியதாகும்.

ரோஷ்னி கூறியதாவது, “ரயிலில் அடிபட்டு மக்கள் இறக்கிறார்கள் என்று கேட்டேன், அதனால்தான் இறக்க வந்தேன்” என்று தனது தீர்மானத்துக்கான காரணத்தை சொன்னார். மேலும், அவரது தந்தை தினமும் தன்னை அடிப்பதாகவும், பள்ளிக்குப் படிக்க அனுப்பாமலும், வேலை செய்ய வைக்கும் நிலையையும் தெரிவித்தார். ஒருநாள் கூரையிலிருந்து தள்ளப்பட்டதாகவும், அப்போது ரத்தம் வரும் அளவுக்கு காயம் ஏற்பட்டதாகவும் கூறினார். அதனால் தான் தானாகவே வீட்டை விட்டு வெளியேறி, இறக்க எண்ணியதாகவும் தெரிவித்தார்.

ரோஷ்னியின் தந்தை சந்தோஷ் ராஜ்புத் என்பவர், ஏற்கனவே 5 பிள்ளைகள் மற்றும் கர்ப்பிணியான மனைவியுடன் வசித்து வருகிறார். நிதி நிலைமை மோசமாக இருப்பதால் குழந்தைகளைச் சரியாக பராமரிக்க முடியவில்லை என்று  அவர் கூறியுள்ளார். இந்நிலையில், சந்தன் ராஜ்புத் என்ற தையல்காரர் மற்றும் விவசாயி ஒருவர், ரோஷ்னியை தத்தெடுக்க விருப்பம் தெரிவித்தார். அவரது குடும்பத்தில் ஒரு மகன் இருப்பதால், பெண் குழந்தையையும் வளர்க்க ஆசைப்பட்டார். அவர் சிறுமிக்கு பள்ளி சேர்க்கை செய்து, ஆடைகள் வாங்கித் தந்தும் உள்ளார்.

இது தொடர்பாக போலீசார் கூறுகையில், தந்தை சட்டப்படி தத்தெடுப்பதற்கான செயல்முறை இல்லாமல் நேரடியாக ஒப்படைப்பதை தவிர்க்க வேண்டும் எனக் கூறியுள்ளனர். எனவே, தற்போது சிறுமி மீண்டும் தந்தையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் சமூகத்தில் குழந்தைகள் பாதுகாப்பு குறித்து மீண்டும் ஒரு முக்கிய கேள்வியை எழுப்பி இருக்கிறது. 7 வயதில் உயிரை எளிதில் துறக்க நினைக்கும் ஒரு குழந்தையின் மன அழுத்தம், சுமைகளை உணர்கிற நிலை, அனைவரையும் சிந்திக்க வைக்கிறது.