உத்தரப்பிரதேச மாநிலம் அவுராயா மாவட்டத்தில் 20 வயதான ராதா என்ற பெண், கணவருடன் ஏற்பட்ட தகராறை தொடர்ந்து விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட பரிதாபமான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜான்சியைச் சேர்ந்த பிரேம் பிரகாஷை கடந்த 3 வருடங்களுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்ட ராதா, நல்ல முறையில் குடும்ப வாழ்க்கை நடத்தி வந்தார். ஆரம்பத்தில் நண்பர்களாக இருந்த இருவரும் பின்னர் காதலாக மாறி, பெற்றோர் சம்மதத்துடன் திருமண பந்தத்தில் இணைந்தனர்.

இந்நிலையில், கடந்த சனிக்கிழமை மாலை ராதாவின் கணவர் பண்ணையில் இருந்து வீட்டிற்கு வந்தார். பின்னர் குளிக்கத் தயாராகியபோது, மனைவி ராதாவிடம் டவல் கேட்க, அவர் அந்த நேரத்தில் படுக்கையில் படுத்தபடி மொபைலில் ரீல்கள் பார்ப்பதாகக் கூறப்படுகிறது. டவலை கொண்டு வராததை தொடர்ந்து, இருவருக்கும் இடையே சண்டை வந்தது. இதில் பிரேம் பிரகாஷ் தனது மனைவியை அறைந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் மனதளவில் முடங்கிய ராதா,  தன்னுடைய இளம் வாழ்க்கையை முடித்து கொள்ள முடிவுக்கு வந்தார்.

திடீரென விஷம் குடித்த ராதாவை, குடும்பத்தினர் உடனடியாக ஜான்சி மருத்துவக் கல்லூரிக்கு கொண்டு சென்றனர். ஆனால், அதற்குள் அவரது உடல் நிலை மோசமடைந்து, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். ராதாவின் அக்கா பிரியங்கா கூட அதே கிராமத்தில் திருமணமாகி இருந்தாலும், தங்கையை சமாதானப்படுத்த முடியவில்லை என்பது இந்த சம்பவத்தில் மிகுந்த சோகமான விஷயமாகும். “சிறிய தகராறு காரணமாக ஒரு இளம் பெண் தனது வாழ்க்கையை முடித்து கொள்ள வேண்டிய நிலைக்கு தள்ளப்பட வேண்டும் என யாரும் விரும்ப மாட்டோம்” என்று குடும்பத்தினர் கூறியுள்ளனர்.

இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ராதா உயிரிழந்தது மொபைல் ரீல்ஸ் காரணமாக நடந்த சிக்கல், அதற்குள் ஏற்பட்ட உடல் வன்முறை என்பதையே காரணமாக வைத்து நடத்தப்படும் விசாரணை முக்கியத்துவம் பெறுகிறது. இளம் பெண்களின் மனநிலை, உறவுகளின் புரிதல், மற்றும் தொலைபேசி அடிமைத்தனத்தால் உருவாகும் குடும்பச் சிக்கல்களைக் குறித்தும் இந்த சம்பவம் சமூகம் முழுவதும் சிந்திக்க வைக்கும் வகையில் உள்ளது.