மும்பையில் உள்ள பேபி கார்டன் அருகே இரண்டு சகோதரர்கள் கடை நடத்தி வருகின்றனர். நேற்று முன்தினம் அவர்கள் இருவரும் கடையில் நின்றபடி ஜாலியாக சிரித்துப் பேசிக்கொண்டிருந்தனர். அப்போது அங்கு பொருள் வாங்க வந்த பிரோஸ் மன்சூரி என்பவர், அந்த சகோதரர்கள் தன்னைப் பார்த்துதான் சிரிக்கிறார்கள் என்று தவறாக நினைத்து ஆத்திரமடைந்தார்.
திடீரென தனது பையில் இருந்த பெரிய கத்தியை எடுத்த மன்சூரி, ஒரு சகோதரரை ஓங்கி குத்தினார். சுமார் 5 முதல் 6 முறை கத்தியால் குத்தியதில் அந்த நபருக்கு கை மற்றும் உடலில் பலத்த காயங்கள் ஏற்பட்டன. இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், சில மணி நேரத்திலேயே மன்சூரியைக் கைது செய்தனர். அவர் ஏற்கனவே ஏதேனும் குற்றங்களில் ஈடுபட்டுள்ளாரா அல்லது மன அழுத்தத்தில் இப்படி செய்தாரா என்று போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
