தமிழக சட்டசபை தேர்தல் முடிந்துள்ள நிலையில், கருத்துக் கணிப்புகள் என்ற பெயரில் வெளியாகும் பொய் தகவல்களை நம்பி கழகத் தொண்டர்கள் யாரும் மனம் தளர வேண்டாம் என்று அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கேட்டுக்கொண்டுள்ளார். 2011 மற்றும் 2016 தேர்தல்களில் கருத்துக் கணிப்புகளைப் பொய்யாக்கி அ.தி.மு.க. வெற்றி பெற்ற வரலாற்றைச் சுட்டிக்காட்டிய அவர், இந்தத் தேர்தலிலும் அ.தி.மு.க. 210 தொகுதிகளில் வென்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைப்பது உறுதி என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

தி.மு.க.வினர் தங்களுக்குச் சாதகமாக ஒரு மாய பிம்பத்தை உருவாக்கி, வாக்கு எண்ணிக்கையின் போது தில்லுமுல்லு செய்யவும் கலவரம் தூண்டவும் வாய்ப்புள்ளதாக அவர் எச்சரித்துள்ளார். எனவே, மே 4-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மையங்களில் அ.தி.மு.க. நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அனைவரும் அதீத விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்றும், நிர்வாகத் திறனற்ற தி.மு.க. ஆட்சி முடிவுக்கு வந்து அ.தி.மு.க. ஆட்சி நிச்சயம் மலரும் என்றும் தனது அறிக்கையில் அவர் குறிப்பிட்டுள்ளார்.