ஐபிஎல் எனது கடைசி போட்டியாக இருக்கும் என்று கிளென் மேக்ஸ்வெல் கூறினார்..

2024 ஐபிஎல்  சீசனுக்கான வீரர்கள் ஏலம் டிசம்பர் 19 ஆம் தேதி துபாயில் நடைபெறும். ஆஸ்திரேலிய ஆல்ரவுண்டர் கிளென் மேக்ஸ்வெல் பல ஆண்டுகளாக ஐபிஎல் போட்டிகளில் விளையாடி வருகிறார். இவருக்காக பல கோடி ரூபாயை உரிமையாளர்கள் செலவு செய்துள்ளனர். மேக்ஸ்வெல்லும் இந்த லீக்கை மதிக்கிறார். ஐபிஎல் தனது கேரியரின் கடைசி போட்டியாக இருக்கும் என்று கூறியுள்ளார். இதனுடன், டேவிட் வார்னர் மற்றும் மிட்செல் ஜான்சன் இடையேயான சர்ச்சை குறித்தும் வீரர் தனது கருத்தை தெரிவித்தார்.

க்ளென் மேக்ஸ்வெல் தற்போது ஐபிஎல்லில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் முக்கிய வீரராக உள்ளார். கடந்த சீசனிலும் இதே அணியில் இருந்தார். இந்த முறையும் ஆர்சிபியுடன்தான் இருக்கிறார். கடந்த சீசனில் மேக்ஸ்வெல் பல போட்டிகளில் சிறப்பாக செயல்பட்டார். எனவே வரும் சீசனிலும் சிறப்பாக செயல்பட்டு அணியை சாம்பியன் பட்டத்துக்கு அழைத்துச் செல்வார் என்ற நம்பிக்கை உள்ளது.

ஐபிஎல் நிறைய கற்றுக் கொள்ள ஒரு வாய்ப்பு :

கிளென் மேக்ஸ்வெல் ESPN இடம் பேசுகையில், “ஐபிஎல் எனது கேரியரின் கடைசி போட்டியாக இருக்கும். ஏனென்றால் என்னால் நடக்க முடியாத வரை ஐபிஎல் விளையாடுவேன். இந்த லீக் எனது கேரியரில் மிகவும் முக்கியமானது. நான் இங்கு சந்தித்தவர்கள், நான் பணியாற்றிய பயிற்சியாளர்கள், நான் விளையாடிய சர்வதேச வீரர்கள் ஆகியோர் எனக்கு பெரிதும் பயனளித்துள்ளனர்” என்றார்.

கிளென் மேக்ஸ்வெல் மேலும் கூறுகையில், “ஐபிஎல்லில் நீங்கள் ஏபி டி வில்லியர்ஸ் மற்றும் விராட் கோலி போன்ற வீரர்களுடன் இரண்டு மாதங்கள் விளையாடுகிறீர்கள். அவர்களிடம் பேச வாய்ப்பு கிடைக்கும். எந்தவொரு வீரருக்கும் இது ஒரு பெரிய கற்றல் அனுபவம். எங்கள் ஆஸ்திரேலிய வீரர்கள் பலருக்கு ஐபிஎல்லில் விளையாட வாய்ப்பு கிடைக்கும் என நம்புகிறேன்” என்றார். சமீபத்திய உலகக் கோப்பையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியை சாம்பியன் ஆக்கியதில் கிளென் மேக்ஸ்வெல் முக்கிய பங்கு வகித்தார். ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இரட்டை சதம் அடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

டேவிட் வார்னர் சாம்பியன் வீரர் :

அதே சந்தர்ப்பத்தில் மேக்ஸ்வெல்லிடம் டேவிட் வார்னர் மற்றும் மிட்செல் ஜான்சன் இடையே நடந்து வரும் சர்ச்சை குறித்தும் கேட்கப்பட்டது. அப்போது அவர், இதைப் பற்றி பேசுவதன் மூலம் சில தலைப்புச் செய்திகளில் என் பெயரை கொண்டு வர விரும்பவில்லை, ஆனால் டேவிட் வார்னர் எப்போதும் ஒரு சாம்பியன் வீரராக இருந்து வருகிறார்” என்று மேக்ஸ்வெல் கூறினார். அவர் நீண்ட காலமாக ஆஸ்திரேலியாவுக்காக கிரிக்கெட் விளையாடி வருகிறார், வார்னரை ஏன் தேர்வு செய்தார்கள் என்பது தேர்வாளர்களுக்கு தெரியும். பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டெஸ்டில் அவர் விளையாடுவதை பார்க்க நான் மிகவும் ஆவலாக உள்ளேன். இந்த கோடையில் அவர் நிறைய ஸ்கோர் செய்வார் என்று நம்புகிறேன்” என்று கூறினார்..