இந்தியாவின் இளம் லெக் ஸ்பின்னர் ரவி பிஷ்னோய், ஐசிசி சர்வதேச டி20 பந்துவீச்சு தரவரிசையில் 5 இடங்கள் முன்னேறி முதலிடத்தைப் பிடித்தார்.

சமீபத்தில் நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடரில் இந்திய அணி சிறப்பாக செயல்பட்டது. சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி டி20 தொடரை 4-1 என கைப்பற்றியது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்தியாவின் இளம் லெக் ஸ்பின்னர் ரவி பிஷ்னோய், ஐசிசி சர்வதேச டி20 பந்துவீச்சு தரவரிசையில் இன்று 5 இடங்கள் முன்னேறி முதலிடத்தைப் பிடித்தார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் பிஷ்னோய் 5 போட்டிகளில் 9 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதனால் 23 வயதான பிஷ்னோய் 699 ரேட்டிங் புள்ளிகளைப் பெற்றுள்ளார்.

இதன் மூலம் ஆப்கானிஸ்தான் சுழற்பந்து வீச்சாளர் ரஷித் கானை (692 புள்ளிகள்) பின்னுக்கு தள்ளி  முதலிடத்திற்கு சென்றுள்ளார். இலங்கை சுழற்பந்து வீச்சாளர் வனிந்து ஹசரங்கா மற்றும் இங்கிலாந்தின் அடில் ரஷித் 679 புள்ளிகளுடன் 3வது இடத்தில் உள்ளனர். அதன்பின்  5வது இடத்தில் இலங்கையின் மகிஷ் தீக்ஷனா (677 புள்ளிகள்) உள்ளார்.

இந்த டி20 தரவரிசையில் முதல் 10 இடங்களில் உள்ள ஒரே இந்திய பந்து வீச்சாளர் பிஷ்னோய் மட்டுமே, அக்சர் படேல் ஒன்பது இடங்கள் முன்னேறி 11வது இடத்திற்கு வந்துள்ளார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 சர்வதேச தொடரில் இந்தியாவை 4-1 என்ற கணக்கில் வென்ற கேப்டன் சூர்யகுமார் யாதவ், பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் முதலிடத்திலும், தொடக்க ஆட்டக்காரர் ருதுராஜ் கெய்க்வாட் ஒரு இடம் சரிந்து 7வது இடத்திலும் நீடிக்கிறார். காயம் காரணமாக ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான தொடரில் விளையாட முடியாமல் போனாலும் ஆல்-ரவுண்டர் வீரர்கள் பட்டியலில் 3வது இடத்தைத் தக்கவைத்துள்ளார் ஹர்திக் பாண்டியா.