
புதுச்சேரி சைபர் கிரைம் இலவச தொலைபேசி எண் 1930-ஐ தொடர்பு கொண்ட ஒருவர் பானிபூரி, சாக்லேட் வேண்டும் என கூறியுள்ளார். போலீசார் அந்த எண்ணை தொடர்பு கொள்ள முடியாததால் முகவரியை கண்டறிந்து விசாரித்தனர். அப்போது 7 வயது சிறுவன் பானிபூரி, சாக்லேட் கேட்டு அடம் பிடித்தது தெரியவந்தது.
அந்த சிறுவன் பள்ளி விடுமுறையை முன்னிட்டு சிவகங்கை மாவட்டத்திலிருந்து புதுச்சேரியில் உள்ள உறவினர் வீட்டிற்கு வந்து தங்கியுள்ளார். அடிக்கடி தனது அம்மாவை செல்போன் மூலம் தொடர்பு கொண்ட போது சைபர் கிரைம் தொடர்பான விழிப்புணர்வு விளம்பரத்தை கேட்டு அதில் வரும் 1930 என்ற எண்ணை மனப்பாடம் செய்து பேசியது தெரியவந்தது.
அந்த சிறுவனின் குழந்தை தனத்தை புரிந்து கொண்ட போலீசார் பெற்றோரை அழைத்து குழந்தைகளிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். சிறுவன் 8-க்கும் மேற்பட்ட முறை சைபர் கிரைம் தொலைபேசி எண்ணை அழைத்ததால் இனி இது போன்ற தொந்தரவு நடந்தால் உங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளனர்.