ஷாங்காய் நகரைச் சேர்ந்த லியு என்ற லாரி ஓட்டுநர், தனது உடல் எடையை அதிகரிக்க வேண்டும் என்ற ஆசையில் ஆன்லைனில் விளம்பரப்படுத்தப்பட்ட ஆரோக்கியப் பொருட்கள் சிலவற்றை 10,000 யுவான், சுமார் 1.25 லட்சம் ரூபாய் கொடுத்து வாங்கியுள்ளார்.
தான் மிகவும் ஒல்லியாக இருப்பதாகக் கருதிய அவர், உடல் எடையை அதிகரிக்க உதவும் சமூக வலைதளப் பெண்மணி ஒருவரின் ஆலோசனையைப் பெற்றுள்ளார்.
அந்தப் பெண், தான் விற்கும் பொருட்கள் அனைத்தும் மூலிகைகளால் ஆனவை என்றும், எவ்விதப் பக்கவிளைவுகளும் இன்றி செரிமான மண்டலத்தைச் சீரமைத்து உடல் எடையை அதிகரிக்க உதவும் என்றும் உறுதியளித்துள்ளார்.
மேலும், அந்தப் பொருட்களைப் பயன்படுத்தினால் உடலில் உள்ள தேவையற்ற நச்சுகள் வெளியேறி, உடல் ஆரோக்கியம் பெருமளவு மேம்படும் என்றும் அவர் பொய்யான வாக்குறுதிகளை அள்ளி வீசியுள்ளார்.
ஆனால், அந்தப் பொருட்களை ஒரு மாதம் பயன்படுத்திய லியுவுக்கு எதிர்பார்த்த பலனுக்கு மாறாக, உடல் எடை அதிகரிப்பதற்குப் பதிலாக 6.5 கிலோ வரை குறைந்து அவர் மிகவும் சோர்வடைந்துள்ளார். விளம்பரங்களை நம்பி ஏமாந்த லியுவின் இந்த பரிதாபகரமான நிலை குறித்த செய்தி, ஷாங்காய் மார்னிங் போஸ்ட் நாளிதழில் வெளியானதைத் தொடர்ந்து சீன சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.
மருத்துவப் பின்னணி இல்லாதவர்கள் கூறும் ஆரோக்கிய ஆலோசனைகளை நம்பி பொதுமக்கள் இதுபோன்று பணத்தையும் ஆரோக்கியத்தையும் இழப்பது வருத்தமளிப்பதாகப் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். எந்தவொரு ஆரோக்கியப் பொருளையும் வாங்கும் முன் அதன் நம்பகத்தன்மையைச் சரிபார்க்க வேண்டும் என்பதற்கு இந்தச் சம்பவம் ஒரு பாடமாக அமைந்துள்ளது.
