தமிழக சட்டசபைத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றங்களால், அ.தி.மு.க.வில் மீண்டும் பிளவு ஏற்பட்டுள்ளது. கட்சித் தலைமைக்கு எதிராக போர்க்கொடி தூக்கிய முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி. வேலுமணி, சி.வி. சண்முகம் உள்ளிட்ட 25 பேரின் பதவிகளைப் பறித்து பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளார்.
நடந்து முடிந்த சட்டசபைத் தேர்தலில் தமிழக வெற்றிக்கழகம் 108 இடங்களைக் கைப்பற்றி முதலிடம் பிடித்தது. தி.மு.க. கூட்டணி 73 இடங்களையும், அ.தி.மு.க. கூட்டணி 53 இடங்களையும் பெற்றன. தொடர் தோல்விகளால் அதிருப்தியில் இருந்த அ.தி.மு.க.வினரிடையே, த.வெ.க. அரசுக்கு ஆதரவு அளிப்பது தொடர்பாக இருவேறு கருத்துகள் நிலவின.
பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்ற எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில், முன்னாள் அமைச்சர்கள் சி.வி. சண்முகம் மற்றும் எஸ்.பி. வேலுமணி ஆகியோர் தலைமைக்கு எதிராக கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து, அவர்கள் தனியாக ஒரு கூட்டத்தைக் கூட்டி பின்வரும் முடிவுகளை எடுத்தனர். அதன்படி தமிழக வெற்றிக்கழக (த.வெ.க.) ஆட்சிக்கு ஆதரவு அளிப்பது.அ.தி.மு.க. சட்டசபை குழு தலைவராக எஸ்.பி. வேலுமணியைத் தேர்வு செய்வது. உடனடியாக கட்சியின் பொதுக்குழுவைக் கூட்டுவது போன்றவைகளாகும்.
ஒரே கட்சிக்கு இரண்டு தலைவர்கள் என உரிமை கோரப்பட்டதால் குழப்பம் நிலவியது. எடப்பாடி பழனிசாமி தரப்பும், வேலுமணி தரப்பும் தனித்தனியாக கடிதங்களைத் தற்காலிக சபாநாயகரிடம் வழங்கினர். இதனால் அ.தி.மு.க. அதிகாரப்பூர்வமாக இரண்டாக உடைந்ததாகக் கருதப்படுகிறது.
கட்சிக்கு விரோதமாகச் செயல்பட்டதாகக் கூறி, சி.வி. சண்முகம், எஸ்.பி. வேலுமணி, சி.விஜயபாஸ்கர் உள்ளிட்ட 25 மாவட்டச் செயலாளர்களின் பதவிகளைப் பறித்து எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டார். இந்த நடவடிக்கையை வரவேற்று எடப்பாடி ஆதரவாளர்கள் பட்டாசு வெடித்துக் கொண்டாடினர்.
இரு தரப்பினருக்கும் இடையே மோதல் உருவாகலாம் என்ற அச்சத்தால், ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை அலுவலகமான ‘எம்.ஜி.ஆர். மாளிகை’யில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அப்பகுதியில் வாகன சோதனையும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. தேர்தல் தோல்வியைத் தொடர்ந்து, த.வெ.க.-வுக்கு ஆதரவு அளிப்பது தொடர்பான மோதலில் அ.தி.மு.க. மீண்டும் பிளவுபட்டுள்ளது. எடப்பாடி பழனிசாமி மற்றும் வேலுமணி தரப்பினர் தனித்தனி அணிகளாகச் செயல்படத் தொடங்கியுள்ளதால் தமிழக அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
