மதுரையில் மார்ச் 1-ம் தேதி நடைபெற உள்ள தேசிய ஜனநாயகக் கூட்டணியின் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்பது உறுதியாகியுள்ளது. இது தொடர்பாக மதுரையில் நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்திய பின் செய்தியாளர்களிடம் பேசிய பிஜேபி மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், தமிழக அரசியல் களத்தில் புதிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ளார். “எங்கள் கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமி தான். அவரிடம் நாங்கள் ஆட்சியில் பங்கு கேட்க மாட்டோம், அது பற்றி நாங்கள் கேட்கவும் இல்லை, அவர்கள் தரமாட்டோம் என்றும் சொல்லவில்லை” எனத் தடாலடியாகத் தெரிவித்தார்.
மேலும், திமுக – காங்கிரஸ் கூட்டணி குறித்துப் பேசிய அவர், “திமுக கூட்டணியில் பெரும் குழப்பம் நிலவுகிறது. காங்கிரஸுக்கு கூட்டணியை விட்டு வெளியேற ஒரு காரணம் தேவைப்படுகிறது, அதற்காகத்தான் ஆட்சியில் பங்கு என்ற முழக்கத்தை எடுக்கிறார்கள்” என்று சாடினார். தூய்மைப் பணியாளர்கள் மற்றும் கௌரவ விரிவுரையாளர்களின் கோரிக்கைகளை திமுக நிறைவேற்றவில்லை என்றும், அடித்துப் பிடித்து ஆட்சிக்கு வந்துவிட்டு தற்போது சமாளித்து வருவதாகவும் முதல்வர் ஸ்டாலினை கடுமையாக விமர்சித்தார். வரும் சட்டமன்றத் தேர்தலில் பல மாற்றங்கள் வரும் என்றும், எம்ஜிஆர் தொண்டர்கள் திமுக-வை எதிர்ப்பதே நோக்கமாகக் கொண்டுள்ளனர் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
