தி.மு.க. அமைப்புச் செயலாளரும், முன்னாள் ராஜ்யசபா உறுப்பினருமான ஆர்.எஸ்.பாரதி, எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி குறித்து பயன்படுத்திய சொற்கள் கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அவரது பேச்சுக்கு அரசியல் கட்சிகள் மற்றும் சமூக வட்டாரங்களில் இருந்து கடும் எதிர்ப்புகள் எழுந்துள்ளன.

ஒரு நிகழ்ச்சியில் பேசிய ஆர்.எஸ்.பாரதி, “நீதிபதி சுவாமிநாதனின் தீர்ப்புக்கு எதிராக பேசக்கூடாது என எடப்பாடி பழனிசாமி கூறுகிறார். இதே நீதிபதி, பிராமணர்கள் சாப்பிட்ட எச்சில் இலையில் உருண்டால் மோட்சம் கிடைக்கும் என கூறியுள்ளார். இதை பழனிசாமி ஏற்றுக்கொள்வார் என்றால், ஹெச்.ராஜா சாப்பிட்ட எச்சில் இலையில் இபிஎஸ் உருளுவாரா?” என கேள்வி எழுப்பினார். இந்த கருத்து சமூக வலைதளங்களில் பரவியதையடுத்து, பலரும் அதனை மிகவும் தரம் தாழ்ந்ததும் அவமதிப்பானதும் என விமர்சித்து வருகின்றனர்.

ஆர்.எஸ்.பாரதி அரசியல் மேடைகளில் பேசும் போது, பலமுறை சர்ச்சைக்குரிய மற்றும் இழிவான வார்த்தைகளை பயன்படுத்தியதாக முன்பும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. அவர் பெரும்பாலும் எதிர்க்கட்சித் தலைவர்கள் மற்றும் தி.மு.க.வை விமர்சிப்பவர்களை குறிவைத்து பேசினாலும், அவை அவதூறாகவும் தரம் தாழ்ந்ததாகவும் இருப்பதாக விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர். கடந்த 2020-ஆம் ஆண்டு, பட்டியலினத்தைச் சேர்ந்தவர்கள் உயர் நீதிமன்ற நீதிபதிகளாக உயர்ந்தது “திராவிட இயக்கம் போட்ட பிச்சை” என அவர் பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதுதொடர்பாக எஸ்.சி./எஸ்.டி. வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. சென்னை உயர் நீதிமன்றம், அந்த பேச்சை பட்டியலினத்தவர்களை அவமதிக்கும் வகையிலானது என கடுமையாகக் கண்டித்தது. பின்னர் நீதிமன்றத்தில் ஆர்.எஸ்.பாரதி வருத்தம் தெரிவித்தார். அதேபோல், தொலைக்காட்சி சேனல்களை “மும்பை விபச்சார விடுதிகள் போல” இயங்குவதாக ஒப்பிட்டு பேசியதும் கடும் விமர்சனத்துக்கு உள்ளானது. இதற்கும் அவர் வருத்தம் தெரிவிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

கடந்த 2023-ஆம் ஆண்டு, ஆளுநர் ஆர்.என். ரவியை விமர்சிக்கும் போது, நாகாலாந்து மக்களை குறித்து அவர் பேசிய கருத்துகள் சர்ச்சையை ஏற்படுத்தின. இதற்கு ஆளுநர் ரவி கண்டனம் தெரிவித்தார். மேலும், மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா, அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட தலைவர்கள் குறித்தும் அவர் பயன்படுத்திய சொற்கள் தொடர்ந்து விமர்சனத்திற்கு உள்ளாகி வந்துள்ளன. “தி.மு.க. ஆட்சியில் கை வைத்தால் பாஜகவினர் உயிரோடு இருக்க மாட்டார்கள்” என அவர் பேசியதாக கூறப்படும் கருத்தும், வன்முறையைத் தூண்டும் வகையில் இருப்பதாக குற்றம்சாட்டப்பட்டது. எதிர்க்கட்சித் தலைவர்களை உருவகப்படுத்தி இழிவுபடுத்தும் வீடியோக்களும் சமூக வலைதளங்களில் பரவி கடும் எதிர்வினைகளை உருவாக்கின.

எதிர்க்கட்சிகள் மற்றும் அரசியல் விமர்சகர்கள், ஆர்.எஸ்.பாரதியின் பேச்சுகளை தரம் தாழ்ந்த, கேவலமான பேச்சு எனக் கண்டித்து வருகின்றனர். அவர் பலமுறை வருத்தம் தெரிவித்திருந்தாலும், இத்தகைய சர்ச்சைப் பேச்சுகள் தொடர்வதாக விமர்சனம் எழுந்துள்ளது. மேலும் அரசியலில் விமர்சனம் இயல்பான ஒன்றாக இருந்தாலும், இழிவான மற்றும் அவமதிப்பான சொற்களை தவிர்க்க வேண்டும் என்பதே பொதுவான எதிர்பார்ப்பாக உள்ளதாக அரசியல் வட்டாரங்கள் கருத்து தெரிவிக்கின்றன.