உத்தரப் பிரதேச மாநிலம் காஸியாபாத்தில் உள்ள ‘சிக்கன் பாயிண்ட்’ என்ற உணவகத்தில் எடுக்கப்பட்ட ஒரு காணொளி சமூக வலைதளங்களில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. பாபுதாம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் அமைந்துள்ள இந்த உணவகத்தில், ஊழியர் ஒருவர் ரொட்டி (Tandoori Roti) தயாரிக்கும்போது அதில் எச்சில் துப்புவது போன்ற காட்சிகள் அந்த வீடியோவில் பதிவாகியுள்ளன. ஜாவேத் என அடையாளம் காணப்பட்ட அந்த ஊழியர், ரொட்டியைத் தேய்த்துவிட்டு தணலில் போடுவதற்கு முன்பாக அதைத் தன் வாய்க்கு அருகில் கொண்டு செல்வது அப்பட்டமாகத் தெரிகிறது. சுமார் 1 நிமிடம் 21 விநாடிகள் ஓடும் இந்த வீடியோ இணையத்தில் பரவி பலரையும் முகம் சுளிக்க வைத்துள்ளது.

​இந்தச் சம்பவம் வெளியானதைத் தொடர்ந்து, அந்த உணவகத்தைப் புறக்கணிக்க வேண்டும் என்று மக்கள் போர்க்கொடி தூக்கியுள்ளனர். உணவின் தரம் மற்றும் சுகாதாரம் குறித்துப் பலரும் கேள்வி எழுப்பி வரும் நிலையில், “இவ்வளவு கேவலமான எண்ணம் கொண்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று நெட்டிசன்கள் ஆவேசமாகப் பதிவிட்டு வருகின்றனர். இருப்பினும், அந்த ஊழியருக்கு ஆதரவாகப் பேசும் ஒரு சிலர், “அவர் எச்சில் துப்பவில்லை, ரொட்டியில் இருக்கும் உலர்ந்த மாவினை (Dry Flour) ஊதித் தள்ளுகிறார்” என்று கருத்து தெரிவித்து வருகின்றனர். எது எப்படியிருந்தாலும், பொதுமக்களின் உடல்நலத்தோடு விளையாடும் இத்தகைய செயல்கள் கடும் விவாதத்திற்கு உள்ளாகியுள்ளது.