மகாராஷ்டிர மாநிலம் ஜல்னாவில் தனது தாயுடன் கள்ளத்தொடர்பு வைத்திருப்பதாகச் சந்தேகித்து, நண்பரை மதுகுடிக்க வைத்து கழுத்தறுத்துக் கொன்ற 17 வயது சிறுவனைப் போலீஸார் கைது செய்துள்ளனர். அதாவது  சிர்சாவாடி கிராமத்தைச் சேர்ந்தவர் நிகில் வாக்மரே (25). இவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுவன் ஒருவனுக்கும் இடையே நட்பு இருந்து வந்தது. அந்தச் சிறுவன் அண்மையில்தான் பிளஸ்-2 பொதுத்தேர்வை எழுதி முடித்துள்ளார்.

தனது தாய்க்கும், நண்பர் நிகிலுக்கும் இடையே தவறான உறவு இருப்பதாக அந்தச் சிறுவன் நீண்ட நாட்களாகச் சந்தேகப்பட்டு வந்துள்ளார். மேலும், நிகில் தனது தாய்க்குத் தொடர்ந்து செல்போனில் குறுஞ்செய்திகளை அனுப்பி வந்ததும் அந்தச் சிறுவனுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் தனது நண்பரைத் தீர்த்துக்கட்ட சிறுவன் திட்டமிட்டுள்ளார்.

கடந்த வெள்ளிக்கிழமை இரவு, சிறுவனும் நிகிலும் சேர்ந்து மது அருந்தியுள்ளனர். அப்போது போதையில் நிகில் மயக்கமடைந்த சமயம் பார்த்து, தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் அவரது கழுத்தை அந்தச் சிறுவன் அறுத்துள்ளார். இதில் ரத்த வெள்ளத்தில் துடித்த நிகில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

தகவலறிந்து வந்த போலீஸார், நிகிலின் உடலைக் கைப்பற்றிப் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதற்கிடையே, ஊரை விட்டுத் தப்பியோட முயன்ற அந்தச் சிறுவனை போலீஸார் மடக்கிப் பிடித்துக் கைது செய்தனர். இதுகுறித்து கொலை வழக்குப்பதிவு செய்துள்ள போலீஸார், சிறுவனிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.