மாநிலங்களவையில் இருந்து ஓய்வுபெறும் 59 எம்.பி.க்களுக்கு பிரியாவிடை அளிக்கும் நிகழ்வின் போது, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே ஆற்றிய உரை அவையில் பெரும் சிரிப்பலையை ஏற்படுத்தியது. தனது 54 ஆண்டுகால அரசியல் அனுபவத்தை நினைவுகூர்ந்த கார்கே, முன்னாள் பிரதமர் எச்.டி. தேவகௌடாவை நோக்கி நகைச்சுவையாக ஒரு கருத்தை முன்வைத்தார்.
மேலும் “தேவகௌடாவை எனக்கு நீண்டகாலமாகத் தெரியும், அவர் ஆரம்பத்தில் எங்களுடன் எதிர்க்கட்சிகளுடன் இருந்தார். ஆனால், அவர் எங்களை காதலித்துவிட்டு, இறுதியில் பிரதமர் மோடியை திருமணம் செய்து கொண்டார்” என்று அவர் கிண்டலாகக் குறிப்பிட்டார். கார்கேயின் இந்த நயமான கிண்டலைக் கேட்ட பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட அவையில் இருந்த அனைத்து உறுப்பினர்களும் வாய்விட்டுச் சிரித்தனர்.
இந்நிலையில் கர்நாடகாவில் தேவகௌடாவின் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சி, பாஜக தலைமையிலான என்.டி.ஏ கூட்டணியில் இணைந்திருப்பதைச் சுட்டிக்காட்டியே கார்கே இவ்வாறு பேசினார். அரசியல் ரீதியான விமர்சனமாக இருந்தாலும், அதனை நகைச்சுவை ததும்ப கார்கே வெளிப்படுத்திய விதம், நாடாளுமன்றத்தில் நிலவிய இறுக்கமான சூழலை மாற்றி கலகலப்பை ஏற்படுத்தியது.
