தெலுங்கானா மாநிலம் கோரூட்லா அருகே உள்ள மாதப்பூர் பகுதியைச் சேர்ந்த 19 வயது வைஷ்ணவி என்பவருக்கும், ஹரிபாபு என்பவருக்கும் கடந்த 8 மாதங்களுக்கு முன்பு காதல் திருமணம் நடைபெற்றது. யூடியூபரான வைஷ்ணவி தற்போது 4 மாத கர்ப்பிணியாக இருந்த நிலையில், திருமணத்திற்குப் பிறகு அவரது கணவர் தொடர்ந்து வரதட்சணை கேட்டுத் துன்புறுத்தி வந்ததாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், கடந்த நேற்று முன்தினம் நள்ளிரவில் தூங்கிக் கொண்டிருந்த வைஷ்ணவியை, அவரது கணவர் ஹரிபாபு கத்தியால் கழுத்தை அறுத்தும், உடல் முழுவதும் சரமாரியாகக் குத்தியும் கொடூரமாகக் கொலை செய்துள்ளார்.

இந்தக் கொடூரச் சம்பவத்திற்குப் பிறகு, ஹரிபாபு தனது இருசக்கர வாகனத்தில் அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டார். மறுநாள் காலை ரத்த வெள்ளத்தில் சடலமாகக் கிடந்த வைஷ்ணவியைக் கண்டு அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர், உடனடியாக காவல்துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர்.

இது குறித்து வைஷ்ணவியின் தந்தை அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார், தலைமறைவாக உள்ள ஹரிபாபுவைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர். கர்ப்பிணி என்றும் பாராமல் வரதட்சணைக் கொடுமையால் அரங்கேறிய இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.