சென்னை சூளைமேடு வீரபாண்டி நகர் பகுதியில் மர்ம கும்பல் ஒன்று போதைப்பொருள் விற்பனையில் ஈடுபடுவதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. அந்த தகவலின் அடிப்படையில் தனிப்படை காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று கண்காணிப்பில் ஈடுபட்டனர். இந்நிலையில் விலை உயர்ந்த போதைப் பொருள் விற்பனையில் ஈடுபட்ட பாப்பிஸ்ட், லாரன்ஸ் ஆகிய இரண்டு பேரையும் காவல்துறையினர் அதிரடியாக கைது செய்தனர்.
மேலும் இவர்கள் கொடுத்த தகவலின் படி ஈரோட்டை சேர்ந்த டென்னீஸ் டிசோசா, ரெனீத் போன்றோரையும் தனிப்படை காவல்துறையினர் கைது செய்தனர். இதையடுத்து கைதான 4 பேரிடம் இருந்தும் போதைப்பொருள் மற்றும் கஞ்சா பொட்டலங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இதற்கிடையில் கைதானவர்கள் என்ஜினீயரிங் பட்டதாரிகள் ஆவர். படித்தும் வேலை கிடைக்காத காரணத்தால் இவர்கள் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டது காவல்துறையினர் விசாரணையில் தெரியவந்துள்ளது.
