சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் இல்லத்தில், இந்திய ஜனநாயகக் கட்சி (ஐஜேகே) நிறுவனரான பாரிவேந்தர் அவரை நேரில் சந்தித்துப் பேசினார். வரவிருக்கும் தேர்தலில் தொகுதிப் பங்கீடு செய்வது தொடர்பாக இந்தச் சந்திப்பு நடைபெற்றது. இதில், தங்கள் கட்சிக்கு எந்தெந்தத் தொகுதிகள் ஒதுக்கப்பட வேண்டும் என்பது குறித்த கோரிக்கைகளை அதிமுக தலைமையிடம் பாரிவேந்தர் விரிவாக எடுத்துரைத்தார்.
இந்தச் சந்திப்பிற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய பாரிவேந்தர், இந்திய ஜனநாயகக் கட்சிக்குச் சாதகமான மற்றும் வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகளின் பட்டியலை எடப்பாடி பழனிசாமியிடம் வழங்கியுள்ளதாகத் தெரிவித்தார். இது தொடர்பாகக் கூட்டணியில் உள்ள மற்ற கட்சிகளுடன் கலந்தாலோசனை செய்த பிறகு இறுதி முடிவை அறிவிப்பதாக அதிமுக தரப்பில் உறுதி அளிக்கப்பட்டிருப்பதாகவும் அவர் கூறினார்.
