தமிழக அரசியலில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள பாட்டாளி மக்கள் கட்சியின் கூட்டணி நிலைப்பாடு குறித்து, வரும் பிப்ரவரி 28-ஆம் தேதிக்குள் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என அக்கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

திண்டிவனம் அருகே உள்ள தைலாபுரம் தோட்டத்தில் இன்று காலை 10 மணி அளவில் பா.ம.க. மற்றும் வன்னியர் சங்க மாநில, மாவட்ட நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், தேர்தல் வியூகங்கள் மற்றும் கூட்டணி குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது. சமீபகாலமாக கட்சித் தலைமைக்கும் நிறுவனர் தரப்பிற்கும் இடையே அதிகாரப் போட்டி நிலவுவதாகக் கூறப்படும் சூழலில், இந்த ஆலோசனைக் கூட்டம் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த டாக்டர் ராமதாஸ் கூறியதாவது, தேர்தல் கூட்டணி குறித்து நிர்வாகிகளுடன் விரிவான ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டன. திராவிட கட்சிகளுடன் தான் பாமகவின் கூட்டணி அமையும். இது குறித்த இறுதி முடிவுகள் எடுக்கப்பட்டு, வரும் பிப்ரவரி 28-ஆம் தேதிக்குள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்றார்.

திமுக தலைமையிலான கூட்டணியில் இணைய ராமதாஸ் தரப்பு ஆர்வம் காட்டினாலும், அக்கூட்டணியில் ஏற்கனவே உள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சி (விசிக) கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. “பாமக உள்ளே வந்தால் நாங்கள் வெளியேறுவோம்” என விசிக திட்டவட்டமாகக் கூறியுள்ளதால் திமுக கதவு அடைக்கப்பட்டுள்ளதாகவே அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அதேவேளையில், அதிமுக கூட்டணியில் அன்புமணி ராமதாஸ் இருப்பதால் அங்குக் கூடுதல் இடங்களைப் பெறுவதிலும், தார்மீக அடிப்படையில் சில சிக்கல்கள் நீடிப்பதாகக் கூறப்படுகிறது. இத்தகைய இக்கட்டான சூழலில், தனது பலத்தை நிரூபிக்கவும் அடுத்தகட்ட நகர்வைத் தீர்மானிக்கவுமே ராமதாஸ் இந்தக் கூட்டத்தைக் கூட்டியுள்ளார் என்பது குறிப்பிடத்க்கது. மேலும் இதன்மூலம் தமிழக வெற்றிக்கழகத்துடன் ராமதாஸ் கூட்டணி அமைக்கவில்லை என்பது உறுதியாகி உள்ளது.