மேற்கு ஆசியாவில் நிலவி வரும் போர் பதற்றத்தால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள ஈரான் நாட்டு மக்களுக்காக, ஜம்மு காஷ்மீர் மக்கள் தாராளமாக நிதி மற்றும் பொருட்களை வழங்கி வரும் சம்பவம் தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது. ஈத் பண்டிகை முடிந்த கையோடு, காஷ்மீரின் புத்காம் மற்றும் பாரமுல்லா மாவட்டங்களில் உள்ள இளைஞர்கள் வீடு வீடாகச் சென்று இந்த நிதித் திரட்டும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இதில் வியப்பிற்குரிய விஷயம் என்னவென்றால், சிறிய குழந்தைகள் தாங்கள் பல ஆண்டுகளாகச் சேமித்து வைத்திருந்த உண்டியல் பணத்தையும், பெண்கள் தங்களின் விலை உயர்ந்த தங்க நகைகளையும் ஈரானுக்காக வழங்கியுள்ளனர்.

குறிப்பாக, 28 ஆண்டுகளுக்கு முன்பு மறைந்த தனது கணவர் நினைவாக வைத்திருந்த தங்க நகையை ஒரு பெண் தானமாக வழங்கிய வீடியோ பலரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

இவை தவிர ரொக்கப் பணம், செப்புப் பாத்திரங்கள் மற்றும் கால்நடைகளையும் மக்கள் ஈரானுக்கு வழங்கியுள்ளனர். காஷ்மீர் மக்களின் இந்த மனிதாபிமான உதவிகளைப் பாராட்டியுள்ள இந்தியாவிற்கான ஈரான் தூதரகம், “இந்த அன்பை நாங்கள் என்றும் மறக்க மாட்டோம்” என உருக்கமாகத் தெரிவித்துள்ளது.