உலக நாடுகளை உலுக்கி வரும் ஈரான் – அமெரிக்கா இடையேயான போர் பதற்றத்தில் தற்போது ஒரு முக்கிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. ஹோர்முஸ் கடல் பகுதியைத் திறந்து விடாவிட்டால் ஈரானின் எரிசக்தி மையங்கள் மீது தாக்குதல் நடத்துவோம் என 48 மணி நேர கெடு விதித்திருந்த அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், தற்போது திடீரென தனது முடிவை மாற்றிக் கொண்டுள்ளார்.
ஈரானுடன் கடந்த இரண்டு நாட்களாக நடைபெற்று வரும் ரகசிய பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதால், அடுத்த ஐந்து நாட்களுக்கு ஈரான் மீது எந்தவிதமான ராணுவத் தாக்குதலும் நடத்தப்படாது என ட்ரம்ப் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
ஈரானின் மிரட்டலுக்கு அமெரிக்கா பயந்துவிட்டதா அல்லது இது அமைதிக்கான ஆரம்பமா என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில், இந்த இடைக்காலப் போர் நிறுத்தத்தால் கச்சா எண்ணெய் விலை குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஐந்து நாட்களுக்குள் இரு நாடுகளுக்கும் இடையே ஒரு சுமூகமான முடிவு எட்டப்பட்டால் மட்டுமே மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் இந்த பயங்கரமான போர்ச் சூழல் முடிவுக்கு வரும் என்பதால் ஒட்டுமொத்த உலகமும் இந்த பேச்சுவார்த்தையை உன்னிப்பாகக் கவனித்து வருகிறது.
