அமெரிக்காவின் பிட்ஸ்பர்க் நகரைச் சேர்ந்த 6 வயது சிறுமி பிம் நீல் (Pim Neill), ஒரே சீசனில் ஒரு லட்சத்திற்கும் அதிகமான ‘கேர்ள் ஸ்கவுட்’ பிஸ்கட் பாக்கெட்டுகளை விற்பனை செய்து புதிய வரலாறு படைத்துள்ளார். ஒரு சாதாரண ஸ்கவுட் கேம்ப் செல்ல வேண்டும் என்ற ஆசையில் தொடங்கிய இவரது பயணம், இன்று ஒட்டுமொத்த தேசத்தையே திரும்பிப் பார்க்க வைத்துள்ளது. மாற்றுத்திறனாளியான இவரை, “உன்னால் மற்றவர்களின் வேகம் குறையும்” என்று கூறி சில ஸ்கவுட் குழுக்கள் சேர்த்துக்கொள்ள மறுத்த நிலையில், இன்று தனது கடின உழைப்பால் அனைவரது வாயையும் அடைத்துள்ளார் இந்தச் சிறுமி.
பிம் நீலின் தந்தை லூக் அனோராக்-நீல், தனது மகளின் இந்த வெற்றியைச் சமூக வலைதளங்களில் நெகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார். “என் மகள் எதையும் சாதிக்கும் பிடிவாதம் கொண்டவள்” என்று கூறும் அவர், வீடு வீடாகச் சென்றும், தேவாலயங்கள் மற்றும் பொது நிகழ்ச்சிகளில் பேசியும் தனது மகள் இந்த இலக்கை அடைய உதவியுள்ளார். பிம் நீலின் இந்த அசாத்திய சாதனை, ஊனத்தை ஒரு தடையாகக் கருதாமல் போராடும் பலருக்குப் பெரும் நம்பிக்கையை அளித்துள்ளது. பிப்ரவரி 16 நிலவரப்படி, ஒரு லட்சத்திற்கும் அதிகமான விற்பனையைத் தாண்டி பிம் நீல் “அன்ஸ்டாப்பபிள்” நாயகியாக ஜொலிக்கிறார்.
