
தற்போதைய காலத்தில் இணையதளத்தின் பயன்பாடு அதிகரித்துள்ள நிலையில், அதன் மூலம் ஏற்படும் மோசடிகளும் அதிகமாகி வருகிறது. அந்த வகையில் நொயிடாவை சேர்ந்த ஒரு பெண்ணிடம் ஆன்லைனில் மோசடி அரங்கேறியுள்ளது. அதாவது இங்கு பூஜா கோயல் வசித்து வருகிறார். இவர் டாக்டராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் இவருக்கு கடந்த 13ஆம் தேதி செல்போனில் அழைப்பு ஒன்று வந்துள்ளது. அதில் பேசிய நபர், தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைய அதிகாரி பேசுவதாக கூறியுள்ளார்.
இதைத்தொடர்ந்து அந்த நபர் பூஜா கோயலிடம், நீங்கள் செல்போனிலிருந்து ஆபாச வீடியோக்கள் வெளியிட்டுள்ளதாகவும் அதற்காக விசாரணை நடத்தப் போவதாகவும் கூறினார். இதையடுத்து அந்த நபர் இது விசாரணை தான் வீடியோ காலில் இணையுங்கள் என்று கூறியுள்ளார். அவருடன் வீடியோ காலில் இணைந்ததும், பூஜா மீது வழக்கு பதிவு செய்துள்ளதாக கூறினார். இது டிஜிட்டல் கைது என்றும், வீட்டை விட்டு வெளியேறக்கூடாது என்றும் கூறியுள்ளார். இந்த வீடியோ கால் விசாரணை 48 மணி நேரம் நடந்ததாக கூறப்படுகிறது. மேலும் ஒரு வங்கி கணக்கை அனுப்பி அதில் 59 லட்சத்து 54 ஆயிரம் ரூபாய் செலுத்தும் படி கூறியுள்ளார்.
அதன்படி பூஜா அந்த பணத்தை அனுப்பிய உடனே, அந்த நபர் விசாரணை முடிந்ததாக கூறி தொடர்பை துண்டித்துள்ளார்.
இதுகுறித்து விசாரித்த பூஜா கோயலுக்கு தான் ஏமாந்து விட்டதாக தெரியவந்துள்ளது. பின் அவர் காவல் துறையினரிடம் புகார் அளித்தார். அந்த புகாரின் படி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து “டிஜிட்டல் கைது” என்ற பெயரில் மோசடி செய்யும் கும்மலை தேடி வருகின்றனர். அவர்களின் வங்கி கணக்கை அடையாளம் கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்கப்படும் என சைபர் க்ரைம் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.