சமூக ஊடகமான எக்ஸ் (X) தளத்தில், லிப்ட் ஆபரேட்டர் (மின்தூக்கி இயக்கும் தொழிலாளி) ஒருவரின் பணியை “உலகிலேயே மிக முட்டாள்தனமான வேலை” என்று கிண்டல் செய்து நபர் ஒருவர் வெளியிட்ட பதிவு, இணையத்தில் பெரும் விவாதத்தையும் கண்டனங்களையும் எழுப்பியுள்ளது. Gabbar என்ற பயனர், புன்னகையுடன் தன் கடமையைச் செய்யும் ஒரு லிப்ட் ஆபரேட்டரின் புகைப்படத்தைப் பகிர்ந்து, இந்த சர்ச்சைக்குரிய கருத்தை பதிவிட்டிருந்தார். விளம்பரத்திற்காகவும், சமூக ஊடக வருவாய்க்காகவும்  நேர்மையாக உழைத்து வாழும் ஒரு சாமானியரின் தொழிலை அவமதிப்பதா என்று காரசாரமான கேள்விகளை எழுப்பி, லட்சக்கணக்கான நெட்டிசன்கள் அந்தப் பதிவுக்கு எதிராகத் திரண்டுள்ளனர்.

 

இந்தப் பதிவுக்குப் பதிலடி கொடுத்துள்ள இணையவாசிகள், “பசியின் கொடுமை தெரியாதவர்களே உழைப்பை இழிவாகப் பேசுவர்; எக்ஸ் தளத்தில் அடுத்தவரைப் பற்றி அவதூறு பரப்பி பணம் சம்பாதிப்பதை விட, நேர்மையாக லிப்ட் இயக்கி குடும்பத்தைக் காப்பாற்றும் இந்த வேலை எவ்வளவோ மேலானது என்று சாடியுள்ளனர். மேலும், பல தொழில்நுட்ப வேலைகள் செயற்கை நுண்ணறிவால் (AI) பறிபோனாலும் இத்தகைய மனித உழைப்பு நிலைத்து நிற்கும் என்றும், குறிப்பாக மருத்துவமனைகளில் அவசர காலங்களில் நோயாளிகளின் உயிரைக் காக்க லிப்ட் ஆபரேட்டர்களின் கையேடு கட்டுப்பாடு (Manual Control) எவ்வளவு முக்கியமானது என்பதையும் பல பயனர்கள் ஆதாரங்களுடன் சுட்டிக்காட்டி உழைப்பின் மாண்பை நிலைநிறுத்தியுள்ளனர்.